Iவேலுமணியின் ஒரே எதிரி யார்?

Published On:

| By Balaji

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கொரோனா நோய்த் தொற்றுப் பணிகளை அரசு ரீதியாக செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை தொடர்ந்து தனது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்கள் மூலம் பரப்பி வருகிறார்.

அதில் ஜூலை 8 ஆம் தேதி ஒரே எதிரி என்று தலைப்பிட்டு, “போர்க்களங்கள் ஓராயிரமாயினும் இன்றைக்கு உலகமெங்கும் நம் அனைவருக்கும் ஒரே எதிரி, கொரோனா என்கிற கொடிய நோய்த்தொற்று! சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே முழுவதுமாக வெல்ல முடியும்! முகக்கவசம் அணிந்தால் மட்டுமே முழுவதுமாக வெல்ல முடியும்! விழித்தெழுவோம்! விழிப்புணர்வால் வெல்வோம்” என்ற வாசகங்களை தனது சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார் எஸ்.பி. வேலுமணி.

இதுபோன்று பல முறை கொரோனா விழிப்புணர்வுப் பதாகைகள், சுலோகங்கள், முழக்கங்களை தனது சமூக தளங்களில் எஸ்.பி. வேலுமணி உருவாக்கிப் பகிர்ந்திருந்தாலும், ‘ஒரே எதிரி’ என்ற முழக்கம் அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படுகிறது.

கொரோனா விழிப்புணர்வுப் பணியில் அரசியல் ரீதியாக கவனிக்க என்ன இருக்கிறது என்று விசாரித்தால், “அமைச்சர் வேலுமணி வெளியிட்டிருக்கும் ஒரே எதிரி என்ற அந்த படத்தை உற்று கவனியுங்கள். ஒரே எதிரி என்ற வார்த்தைகளுக்குப் பின்னால் திமுகவின் சின்னமான உதயசூரியன் இருக்கிறது பாருங்கள். கொரோனா கிருமியையே ஒரே எதிரி என்று சொன்னவர், அதன் ஊடாக திமுகவையும் தனது ஒரே எதிரி என்று சொல்கிறார். இதன் மூலம் திமுகவை மட்டும்தான் ஒரே எதிரி என்று சித்திரிக்கிறார். வேறு யாரையும் அல்ல” என்று இந்த ட்விட்டுக்குள்ளேயே ட்விஸ்ட் வைக்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சருக்கு அடுத்து திமுகவினரால் கடுமையான புகார்களுக்கு இலக்காகிறவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான். தனக்கு எதிராக ஸ்டாலின் வெளியிடும் ஒவ்வொரு அறிக்கைக்கும் வேலுமணி இப்போது உடனுக்குடன் பதில் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரே எதிரி என்ற விழிப்புணர்வு விளம்பரத்தின் பின்னணியில் உதயசூரியன் சின்னத்தைத் திட்டமிட்டு வைத்ததன் மூலம் தனது ஒரே எதிரி கொரோனா மட்டுமல்ல, உதயசூரியனும்தான் என்றே சொல்லாமல் சொல்கிறார் அமைச்சர் வேலுமணி.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share