இலவச ஒமிக்ரான் தொற்று பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் டெல்டா வகை தொற்றுக்கு மாற்றாக ஒமிக்ரான் தீவிரமடைந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். புதிய திரிபு பரவலினால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிவரும் நிலையில், இதன்மூலம் சைபர் குற்றங்கள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக இணையம் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றுவதற்கு புதிய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இப்போதெல்லாம் ஒமிக்ரான் தொடர்பான சைபர் கிரைம்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. அதிவேகமாக பரவி வரும் ஒமிக்ரானை மையமாகக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தனியார் மற்றும் அரசு சுகாதார நிறுவனங்கள் போல் போலியாக இணையதளம் உருவாக்கி இமெயில் மூலமாக சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை தொடர்பு கொள்கின்றனர். இமெயில் மூலம் அனுப்பப்படும் லிங்க்கில் அரசாங்கத்தால் விதிக்கப்படும் ஒமிக்ரான் கட்டுப்பாடுகளை தவிர்க்க, ஒமிக்ரான் தொற்றை கண்டறிய பிசிஆர் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று விளம்பரம் வெளியிட்டு மக்களை கவருகின்றனர். அதில், மக்கள் ஒமிக்ரான் பிசிஆர் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருக்கும். அதை நம்பி லிங்கை க்ளிக் செய்து உள்ளே நுழைபவர்களின் வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள் உள்ளிட்டவைகளை பெற்றுக் கொண்டு இணைய மோசடிகள் நடைபெறுகின்றன.
அதனால் மக்கள் தங்களுக்கு வரும் அனைத்து இணையதளங்களின் லிங்க்குகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகு உள்ளே செல்ல வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,