மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் செமஸ்டரில் மட்டும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் என்று அறிவித்தார். கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து ஆண்டு மாணவர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி என்று அறிவித்தார். இதனால், மாணவர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதுபோன்று ‘ஆல் பாஸ் முதல்வர்’ என்று அழைக்கப்பட்டார்.
இந்த சூழலில், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவர், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆகிறது. முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. பண்டிகைக் காலம், பருவமழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை. செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த செமஸ்டருக்கான பாடத்திட்டம் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத்திட்டம் கல்லூரிப் பேராசிரியர்களுக்குக் கூட இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை என்று மாணவர்கள் தெரிவித்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கல்லூரிகளில் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், பல மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடித் தேர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டி, இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து, வகுப்பைப் புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
எனவே, அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடித் தேர்வு நடத்தினால்தான் மாணவச் செல்வங்கள் முழுத் திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும்.
எனவே இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்த வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், “சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு கல்லூரிகளில் சுழற்சி முறையில்தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆய்வக பயிற்சி வகுப்புகளை நேரடியாக நடத்தாததால், ஆய்வு உபகரணங்களை நேரில் பார்க்காத சூழ்நிலையில் நேரடி தேர்வில் பங்கேற்பது மிகவும் கடினம் என்றும், இணையதள சிக்னல் இன்மை காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் முழுமையாக பங்கேற்க முடியாத சூழ்நிலை பெரும்பாலானோருக்கு ஏற்பட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற நிலையில் ஆன்லைன் வாயிலாகத் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள ஒருவித பதற்றம் குறைந்து ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
எனவே தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவ மாணவியரை அழைத்துப் பேசி இந்த செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்தவும் நேரடி வகுப்புகள் முழுமையாக நடைபெற ஆரம்பித்த பிறகு நேரடி தேர்வுகள் நடத்தவும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் மழை வெள்ளம் பாதித்த சென்னையை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். இருவரும் ஏன் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்கின்றனர் என்று விவாதம் எழுந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருவரும் சேர்ந்து ஆய்வு செய்தனர்.
இந்த சூழலில் தற்போது ஒரே பிரச்சினைக்காக இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுகவினர் இடையே மீண்டும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
�,”