ஓராண்டில் செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலின் பதில்!

politics

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் இன்று மே 2 திமுகவில் இணைந்தனர்.

நாம் தமிழர் கட்சியில் ஏற்கனவே செயல்பட்டு, திமுகவில் இணைந்து தற்போது திமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் ராஜீவ் காந்தியின் ஏற்பாட்டில் இந்த இணைப்பு விழா திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

விழாவில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ” ஏற்கனவே தான் இருந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த ராஜீவ்காந்தி தற்போது தொலைக்காட்சி விவாதங்களில் மிகச்சிறப்பாக மெய்சிலிர்க்கும் படி தன் வாதங்களை முன்வைத்து வருகிறார். அவரைப் பின்தொடர்ந்து வந்திருக்கும் இளைஞர் கூட்டம் ஆகிய நீங்களும் அவரை போலவே கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இன்னும் இரண்டு வருடங்களில் திமுகவின் 75 ஆவது வருட விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம்” என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த 1949ஆம் ஆண்டு திமுக தொடங்கியதிலிருந்து அதன் தேர்தல் வெற்றிகளை பட்டியலிட்டுக் கொண்டே வந்தவர்,
“ஆறாவது முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டு உங்களில் ஒருவனாக இருக்கக் கூடிய
கருணாநிதி முத்துவேலர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆட்சி அமைந்தது. எதற்காக இதையெல்லாம் நான் வரிசைப்படுத்தி சொல்கிறேன் என்றால் ஆட்சி என்பது ஏதோ நாம் சொகுசாக இருப்பதற்கான பதவி என்று கருதாமல் ஆட்சியில் இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு தொண்டாற்றுகிறோம். ஆட்சியில் இல்லை என்று சொன்னால் மக்களுக்காக போராடக்கூடிய வாதாடக் கூடிய பணிகளை செய்து வந்திருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொண்டாற்ற பேரியக்கம் தான் திமுக” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,

“கடந்த வருடம் இதே மே இரண்டாம் தேதி தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து நாம் அமோகமாக வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற செய்தி வந்தது. அதற்குப் பிறகு ஐந்து நாட்கள் கழித்து மே 7-ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்றோம். நாம் ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவேறப் போகிறது.
பத்து வருஷம் 20 வருஷம் ஆட்சியில் இருந்து இருந்தால் என்ன செய்திருப்போமோ அந்த சாதனைகளை இந்த ஒரு வருடத்தில் நாம் செய்திருக்கிறோம். இன்னும் செய்யப் போகிறோம்.

சட்டமன்றமானாலும் மக்கள் மன்றமானாலும் எதிர்க்கட்சிகள் நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அரசியல் ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. இதில் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க நாங்கள் தயாராக இல்லை” என்று பேசினார் ஸ்டாலின்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.