தமிழகம் வந்த பிசிஆர் கருவிகள்: பரிசோதனை அதிகரிப்பு!

Published On:

| By Balaji

தென்கொரியாவிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

இன்று மட்டும் 34,831 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அதிகரித்து வருவதால் பிசிஆர் கருவிகளின் தேவையும் அதிகரித்தது. தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் 7 லட்சம் கருவிகள் தென் கொரியாவில் இருந்தும், ஒரு லட்சம் கருவிகள் நமது நாட்டிலும், மேலும் 2 லட்சம் கருவிகள் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்தும் வாங்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தென்கொரியாவிலிருந்து நேற்று தமிழகத்திற்கு 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன. தமிழக அரசிடம் 5.60 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் கருவிகள் வந்துள்ளதால் பரிசோதனை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share