Vதடுப்பூசி: முதல் நாள் முன்பதிவு!

Published On:

| By Balaji

தடுப்பூசிக்கான முதல் நாள் முன்பதிவில் 4 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. மாலை 4 மணிக்கு தொடங்கிய முன்பதிவில் பல சிக்கல்களை சந்தித்த பயனாளர்கள் ட்விட்டரில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின் ஆளுமை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், “18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்திலேயே சுமார் ஒரு கோடி இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியா இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதை இது காட்டுகிறது. கோவின் போர்ட்டலில் ஒரு நிமிடத்துக்கு 27 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

மக்கள் சிரமமின்றி முன்பதிவு செய்வதற்காக, 50-60 பொறியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் போர்ட்டல் சீராக இயங்குவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவின் போர்ட்டலை அமைப்பதற்கும், சீராக இயங்குவதை உறுதி செய்வதற்கும் இந்த அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம், நேரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் பலரும் புகார் தெரிவித்தனர். ஏனெனில் மாநிலங்கள் இன்னும் “தடுப்பூசி தயாரிப்பாளரிடமிருந்து தடுப்பூசி வாங்குவதற்கான செயல்முறையை இறுதி செய்யவில்லை. மேலும், அரசு, தனியார் மையங்கள் தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேரப் பட்டியலை தயாரித்த பிறகே முன்பதிவு செய்தோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு, போர்ட்டலில் இடம், நேரம் ஆகியவை காட்டப்படும்.

அதிக அளவில் பயனர்கள் போர்ட்டலில் இருப்பதால், நிச்சயமாக சிக்கல் ஏற்பட்டிருக்கும். இருப்பினும், அந்த பிரச்சினை 30 நிமிடங்களுக்குள் சரிசெய்யப்பட்டது. 24 மணி நேரமும் பயனர்கள் கோவின் போர்ட்டலை அணுகும் வகையில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பயனர்கள் பொறுமையாக இருந்து முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதல்முறை முயற்சிக்கும்போது முன்பதிவு செய்ய இயலவில்லை என்றால், போர்ட்டலை புதுப்பித்து (refresh ) விட்டு மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share