இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதை ஒன்றிய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவ ஆரம்பித்ததிலிருந்து தினந்தோறும் மக்கள் அச்சத்தோடு இருக்கின்றனர். கிட்டதட்ட 29 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் தற்போது இந்தியாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று(டிசம்பர் 2) பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்,” தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு வந்த இவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பகுப்பாய்வு சோதனையில் ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இருவருமே ஆண்கள். அவர்களில் ஒருவருக்கு 66 வயது, மற்றொருவருக்கு 46 வயது. ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை. இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை 29 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது. உலகளவில் 373 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வகை கொரோனா வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான். அதனால் இதுகுறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. நோய் தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை தவறாமல் கடைபிடித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
ரிஸ்க் என்று பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முதலில் ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படும். அதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், “ஒமிக்ரான் வைரஸ் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். தொற்று குறித்து ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாங்களும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கான தற்போதைய தேவை அதிகரித்துள்ளது. அதனால் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தாமதம் வேண்டாம். எந்த நேரத்தில், எந்த தடுப்பூசிக்கான பூஸ்டர்களை வழங்குவது என்பதற்கான அறிவியல் பகுத்தறிவு பரிசோதனையில் உள்ளது. தற்போது, அனைத்து பெரியவர்களுக்கும் இரண்டு டோஸ்களையும் செலுத்தி முடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக மீண்டும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
**தென்னாப்பிரிக்கா**
ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவில். தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 8,500 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
**ஐரோப்பா**
ஐரோப்பா நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் பதிவான மொத்த பாதிப்புகளில் 70% பதிவாகியுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் 2.75 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
**-வினிதா**
�,