புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவில் இன்னும் கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று (நவம்பர் 30) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க நாடுகளில் தோன்றிய ஒமிக்ரான் திரிபு வைரஸ் பல்வேறு நாடுகளையும் தாக்கியிருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியதை அடுத்து இந்தியாவில் மூன்றாவது அலை தீவிரமாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய சுகாதார அமைச்சர் மாண்டவியா, “ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் கண்டறியப்படவில்லை. நாங்கள் உடனடியாக சந்தேகத்துக்கிடமான வழக்குகளைச் சரிபார்த்து, மரபணு வரிசைமுறையை நடத்துகிறோம். சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
புதிய வைரஸ் தொடர்பான உலகளாவிய நிலைமைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா முதல் அலை, இரண்டாம் அலையில் நாம் நிறைய கற்றுக்கொண்டோம். எனவே இது தொடர்பான ஆய்வுக்காக நம்மிடம் ஆய்வகங்களும் உள்ளன. இந்த ஒமிக்ரான் திரிபு வைரஸ் நாட்டுக்கு வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று கேள்வி நேரத்தின்போது ராஜ்ய சபாவில் கூறினார் ஒன்றிய சுகாதார அமைச்சர்.
முன்னதாக, ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிப்பதற்கான சோதனைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
புதிய வைரஸ் RT-PCR மற்றும் RAT சோதனைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் அதேவேளையில், போதுமான உள்கட்டமைப்பு மற்றும் தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பூஷண் மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
**-வேந்தன்**
�,