திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எழும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.
அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் குரல் கொடுத்தன. இதைத் தொடர்ந்து உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்புச் சட்டம் கடந்த மார்ச் மாதம் விலக்கப்பட்டதையடுத்து அவர் விடுதலையானார்.
இந்த நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்குப் பேட்டியளித்த உமர் அப்துல்லா, “தடுப்புக் காவலில் இருந்த ஆறு மாதங்களும் புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன், நடந்துகொண்டிருந்தேன். ஐந்து மாதங்கள் கழித்து ஒரு செட்டாப் பாக்ஸை வைத்தார்கள். அதன் மூலம் நான் உலக நடப்புகளை தெரிந்துகொண்டேன். பிபிசி மற்றும் அல்ஜெசீரா மூலமாக பெரும்பாலான செய்திகளைத் தெரிந்துகொண்டேன்” என்றார்.
காஷ்மீர் விவகாரத்தில் தேசிய அரசியல் கட்சிகள் வலுவாகக் குரல் கொடுக்காதது தனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்ததாக ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். இந்த நேர்காணலை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். இதுதொடர்பாக லிஸ் மேத்யூ என்னும் பத்திரிகையாளர், “பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மக்களவையில் குரல் கொடுத்திருந்தனர்” என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்த உமர் அப்துல்லா, “இந்த விஷயத்தில் விவாதத்துக்கே இடமில்லை. திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினின் உறுதியான ஆதரவுக்கு எப்போதும் நாங்கள் நன்றி கொண்டிருப்போம். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காஷ்மீரில் நடப்பவை குறித்து அயராமல் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்” என்று பதிலளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கும், சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததற்கும் தமிழகத்திலிருந்து திமுக, மதிமுக, விசிக, இடதுசாரிக் கட்சிகள் தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
**எழில்**�,