குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ஜார்க்கண்டில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தலில் அதிக இடத்தில் வென்ற ஆளும் கட்சியான பாஜக தோல்வியைச் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதியில் 11 தொகுதியில் வெற்றி பெற்றது பாஜக.
தற்போது சட்டமன்றத் தேர்தலில் ஜெஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தும்கா தொகுதியிலும் மக்களவைத் தேர்தலில் பாஜகதான் வெற்றி பெற்றிருந்தது. அதுபோன்று கோட்டா, சத்ரா, கொடர்மா, தன்பத், ரஞ்சி, ஜாம்ஷெட்பூர், குந்தி, லோஹர்டாகா, பாலமு, ஹசாரிபக் என 11 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஜெஎம்எம் ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஏஜேஎஸ்யு ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றன.
இந்நிலை மாறி தற்போது தோல்வியைச் சந்தித்துள்ளது பாஜக. அதுபோன்று கடந்த 24ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த, ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் போட்டியிட்ட கிழக்கு ஜாம்ஷெட்பூரிலும் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தொகுதியில் பாஜகவில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான சரயு ராயு வெற்றி பெற்றார்.
பாஜகவின் தோல்விக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி-யை கொண்டு வந்தது என பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் கடந்த 20 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்த ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடன் (ஏஜேஎஸ்யு) இருந்து பிரிந்து தனியே போட்டியிட்டதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளால் மாணவர் சங்கம் தனித்துப் போட்டியிட்டது. ஒருவேளை கூட்டணியில் இருந்திருந்தால், மதுபூர், ராம்கர், டும்ரி, காட்ஸிலா, ஜுக்சலை, இச்சாகர், சக்ரதர்பூர், கிஜ்ரி மற்றும் லோஹர்டாகா என குறைந்தது ஒன்பது இடங்களில் கூடுதலாக பாஜக வென்றிருக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி பழங்குடியினர் அல்லாத ஒருவரை 2014ல் முதல்வராக நியமித்ததும் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. முதல்வராக இருந்த ரகுபர் தாஸ் பழங்குடியின மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், அதனால் அம்மக்கள் அதிருப்தியில் இருந்தாகவும் சொல்லப்படும் நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சரயு ராயுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதுபோன்று பாஜக தலைவர் லட்சுமண ஜிலுவாவும் சக்ரதபூரில் தோல்வியடைந்துள்ளார். ரகுபர் தாஸ், லட்சுமண ஜிலுவா என பாஜகவைச் சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்தது , அக்கட்சியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் 47 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் பாஜக அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜெஎம்எம் கட்சி 18.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் 13.88 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் பாஜக 33.37 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் அதிகமாகும்.
இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஹேமந்த் சோரன் வரும் 29ஆம் தேதி முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெஎம்எம் மூத்த தலைவர் சிபு சோரன் வீட்டில் நேற்று இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் ஆளுநர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். அப்போது, தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் பட்டியலும் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெஎம்எம் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “வரும் 29ஆம் தேதி பகல் 1 மணிக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார்” என்றார். இதனிடையே ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதாந்திரிக்) கட்சியும், தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
�,”