கடலோரக் காற்றாலை மின்சாரம்: டென்மார்க் பிரதமருடன் மோடி பேச்சு!

Published On:

| By admin

டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃப்ரடெரிக்செனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 3ஆம் தேதி) இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
இரு தலைவர்களும் நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தூதுக் குழு நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியா – டென்மார்க் பசுமை உத்திப் பங்களிப்பின் முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் ஆய்வு செய்தனர். புதுப்பிக்கவல்ல எரிசக்தியில், குறிப்பாக கடலோரக் காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் திறன் மேம்பாடு, சுகாதாரம், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
நமது முக்கியமான திட்டங்களுக்கு இந்தியாவில் உள்ள டென்மார்க் நிறுவனங்களின் ஆக்கபூர்வ பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். டென்மார்க்கில் இந்திய நிறுவனங்களின் ஆக்கபூர்வ பங்களிப்பைப் பிரதமர் ஃப்டெரிக்சென் எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கு இடையே மக்களுடனான உறவுகள் விரிவடைந்திருப்பதைப் பாராட்டிய இரு தலைவர்களும் குடிபெயர்தல் மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பு குறித்த நகல் பிரகடனத்தை வரவேற்றனர்.
பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த கருத்துகளையும் இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர் என்று மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று (மே 3ஆம் தேதி) ஜெர்மனி நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்களுடன் காணொளி முறையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது 50,000 மெகாவாட் சூரிய சக்தியுடன் 30,000 மெகாவாட் கடலோர காற்றாலை திறனையும் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மின்சார பற்றாக்குறையை ஈடுகட்ட, கடலோர காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது அரசு.
**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel