மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது டெல்லி சிபிஐ நீதிமன்றம். அந்த வழக்கில் தண்டனை விவரங்கள் இன்று (பிப்ரவரி 22) அறிவிக்கப்படுகின்றன.
தாதுமணல் தொழிலபதிரான வி வி மினரல்ஸ் வைகுண்டராஜன் இந்தியாவின் பல மாநிலங்களில் தொழில் நடத்தி வருகிறார். இது தொடர்பாக நீரஜ் கட்ரி என்ற மத்திய சுற்றுச் சூழல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 1ம் ஆம் தேதி அளித்த தீர்ப்பில், “அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு, ஏ 1 ஆக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரஜ் கட்ரி, ஏ2ஆக குற்றம் சாட்டப்பட்ட வைகுண்டராஜனிடம் இருந்து 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இந்த லஞ்சத்தை நீரஜ் கட்ரியின் மகன் சித்தார்த் கட்ரிக்கு விஐடி தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்க்கைக் கட்டணமாக டிடி எடுத்துக் கொடுத்திருக்கிறார். மேலும் அரசு ஊழியரான நீரஜ் கட்ரி வைகுண்டராஜனிடம் இருந்து தனக்கும் தன் மகனுக்குமான டெல்லி-சென்னை விமான டிக்கெட்டுகளை பெற்றிருக்கிறார். இதை வைகுண்டராஜனின் வி.வி.மினரல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் சுப்புலட்சுமி என்பவர்தான் கட்ரியிடம் கொடுத்திருக்கிறார்.
இந்த லஞ்சம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள்ள திருவேம்பாலபுரம் கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் விவி மினரல்ஸ் ஆலைக்காக சுற்றுச் சூழல் கிளியரன்ஸ் விரைவாக வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் லஞ்சம் வாங்கிய நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் ஆகியோர் குற்றவாளிகள்” என்று தீர்ப்பளித்தது.
2012 இல் நடந்த இந்த லஞ்சப் பரிமாற்றம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை 2021 ஜனவரி 19 ஆம் தேதி முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. பின் தீர்ப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனையை பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி தண்டனை இன்று வழங்கப்படுகிறது.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும்,மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனமும் பட்டியலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
**-வேந்தன்**�,