நடப்பாண்டில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு கிடையாது: மத்திய அரசு

Published On:

| By Balaji

ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தமிழக அரசு, அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது. நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், இட ஒதுக்கீட்டில் மாறுதல் செய்வது குழப்பங்களை ஏற்படுத்தும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாகவும், மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற்த்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

மத்திய அரசின் பதில் மனுவை விமர்சித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று காரணம் கூறி உள்ள பாஜக அரசு, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆனாலும், 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது” என்று சாடினார்.

ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும் என்றதோடு, நடப்பு ஆண்டிலேயே உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

*எழில்*�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share