டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்குமா CAA போராட்டம்? எடப்பாடிக்கு கிடைத்த ரிசல்ட்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உறுதியாகப் பரவி வருகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஒருங்கிணைக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டங்களில் குறைந்தது 1,000 பேர் பங்கேற்பதாகவும் தெரிகிறது. போராட்டங்களைக் கூர்தீட்டுவதில் மாணவர்களின் பங்கு அதிகமாக இருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே கல்லூரிகளுக்கு 12 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து உத்தரவிட்டது அரசு. ஆனாலும் ஃபேஸ்புக் மூலமும், வாட்ஸ் அப் மூலமும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பல பகுதிகளில் நடைபெறுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் கிராம அளவில் நடக்கும் முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் ஆளுங்கட்சி என்ற அளவில் நாமே கைப்பற்றிவிடலாம் என்றுதான் முதல்வர் எடப்பாடி கணக்குப் போட்டார். மற்ற சில அமைச்சர்கள் தேர்தலைத் தள்ளிப் போடலாம் என்று விரும்பியபோதுகூட விடாப்பிடியாகத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து நடத்த வைத்தார் முதல்வர். இந்த நிலையில் இந்தப் போராட்டங்கள் உள்ளாட்சித் தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்று ரிப்போர்ட் கேட்டிருந்தார் முதல்வர். களத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் முதல்வரைத் திருப்திப்படுத்தவில்லை.

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதி தேர்தலின்போது காஷ்மீரில் 370ஆவது பிரிவை ரத்து செய்துவிட்டார் அமித் ஷா. அதேபோல உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் பாஸ் செய்ததாலும், அதுவும் ராஜ்ய சபாவில் முழுக்க முழுக்க அதிமுகவாலேயே இந்த மசோதா சட்டமானது என்ற தகவல் கிராமங்கள் வரை பரவியிருப்பதாலும் உள்ளாட்சித் தேர்தல் அதிமுகவுக்குக் கடுமையான சவாலாக இருக்கும். ஏற்கெனவே கட்சிக்குள், கூட்டணிக்குள் நிலவிய பிரச்சினைகளால் ஆங்காங்கே பின்னடைவு இருந்தது. அது சரிசெய்யப்பட கூடியதாக இருந்தது. ஆனால், குடியுரிமை சட்டம், அதன் பின்னான போராட்டங்களைத் தமிழக அரசு கையாளும் முறை ஆகியவற்றால் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு எளிதாக இருக்காது, திமுக கூட்டணியை நோக்கி மக்கள் மனதளவில் நகர்ந்துவிட்டனர் என்பதே முதல்வருக்குக் கிடைத்த ரிப்போர்ட். தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியின் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றும், இது தொடர்ந்தால் சட்டமன்றத் தேர்தலிலும்கூட இதே நிலைதான் நீடிக்கும் என்றும் முதல்வருக்கு சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் பேசிய முதல்வர், போராட்டம் தொடர்வது பற்றி விசாரித்துள்ளார். மேலும், இது ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல தமிழகம் முழுவதும் பரவி வருகிறதா என்றும் முதல்வர் கேட்டிருக்கிறார். பல இடங்களில் ஆங்காங்கே உள்ள முஸ்லிம் ஜமாத்தார்கள், அரசியல் கட்சியினர், மாணவர் தமிழ் அமைப்புகள் சேர்ந்தே போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும், ஒவ்வொரு போராட்டத்திலும் அதிமுக – பாஜக கூட்டணி மிகக் கடுமையான சொற்களால் விமர்சிக்கப்படுகிறது என்றும் முதல்வருக்குப் பதில் கிடைத்திருக்கிறது. அதேநேரம் இது ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல தொடர்வதற்கு வாய்ப்பில்லை, இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்றும் போலீஸ் அதிகாரிகள் முதல்வருக்குத் தெரிவித்துள்ளார்கள்.

திமுக தரப்பில் நாளை (23ஆம் தேதி) பேரணியை நோக்கியே முழு கவனமும் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பணிகளோடு இந்தப் பேரணி தொடர்பான பணிகளிலும் மாசெக்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தப் போராட்டத்தின் அரசியல் பலனும் திமுகவுக்கே கிடைக்க வேண்டும் என்பதில் அக்கட்சி முழுமையான முயற்சியில் இருக்கிறது. நாளை நடக்க இருக்கும் பேரணியில் அதிகபட்ச எண்ணிக்கையில் மக்கள் திரள் கூட்டப்பட்டு இந்தியாவே நம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதே ஸ்டாலின் உத்தரவு” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share