மோடிக்கு நெருக்கமான அதிகாரிக்கு ஸ்டாலின் அளித்த புதிய பொறுப்பு!

Published On:

| By Balaji

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

14 பேர் கொண்ட நிபுணர் குழுவில் நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் அமைப்பின் தலைமை திட்டமிடல் அதிகாரி, காலநிலை நடைமுறை உலக வள நிறுவனத்தின் இயக்குனர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, அதை அகற்றும் வழி என்ன என்பது பற்றி வல்லுநர் குழு ஆராய்ந்து அரசிற்கு அறிக்கை அளிக்கும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணி புரியும் வெ இறையன்பு ஐ.ஏ.எஸ்.சின் சகோதரர்தான் திருப்புகழ் ஐஏஎஸ்.

2005- 06இல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பணியாற்றியபோது அவரது செயலாளராகப் பணியாற்றியவர் திருப்புகழ். அதையடுத்து குஜராத் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றினார். பேரிடர் மேலாண்மையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர்.

2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். பணியில் இருக்கும் போது நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை ஒட்டி அங்கு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக இந்தியாவால் அனுப்பப்பட்டார் திருப்புகழ் ஐஏஎஸ். அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பிய பிறகு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை மற்றும் திட்ட ஆலோசகர் ஆக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

அப்படிப்பட்ட நீண்ட அனுபவம் கொண்ட திருப்புகழ் ஐஏஎஸ்தான், தற்பொழுது சென்னை வெள்ளத்துக்கு பிறகு… தண்ணீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்புகழ் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

**வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share