டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் : முக்கிய சந்திப்புகள்!

Published On:

| By Balaji

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நேற்று முன் தினம் (அக்டோபர் 23) பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த நிலையில் நேற்று (அக்டோபர் 24) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கடந்த வாரங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதன் பின் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்தனர்.

பாஜக,அதிமுகவினர் ஆளுநரிடம் அளித்த புகார்களில், ‘தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றிய புகார்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதிமுக கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி புகார் அளித்திருந்தது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 23 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகள் பற்றிக் கேட்டதாகவும் அதற்கு பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிவடைகிற நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி ஆளுநரும், பிரதமரும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தார் ஆளுநர் ரவி. டெல்லி செல்லும் ஆளுநர்கள் பொதுவாக பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரைதான் சந்திப்பார்கள். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவத்தை கூடுதலாக்கியுள்ளது.

தமிழக மீனவர் ராஜ்கிரண் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பற்றி இந்த சந்திப்பில் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டிஃபென்ஸ் காரிடார் திட்டம் பற்றியும் விவாதித்திருக்கிறார்கள். மேலும் தமிழ்நாடு நீண்ட கடற்கரையைக் கொண்ட எல்லையோர மாநிலம் என்பதால், பாதுகாப்பு பற்றியும் தமிழக ஆளுநரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் விவாதித்துள்ளார்கள் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநர் டெல்லியில் இன்னும் சில நாட்கள் தங்கி இன்னும் சில முக்கியமான சந்திப்புகளை நடத்துவார் என்று தெரிகிறது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share