அறநிலையத்துறை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது ஆர்.எஸ்.எஸ்.கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆதி சங்கரர் விழா தமிழகத்தில் 16 கோயில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களோடு கலந்துகொண்டனர்.
இந்த சர்ச்சை பற்றி மின்னம்பலத்தில் முதன் முறையாக நவம்பர் 12 ஆம் தேதி [கோவில்களை அரசியல் கூடாரமாக்கிய பாஜக: எதிர்த்தவருக்கு கொலை மிரட்டல்](https://minnambalam.com/politics/2021/11/12/31/tamilnadu-bjp-anti-hindu-srirangam-temple-annamalai-rangaraja-narasimman) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிரதமர் மோடி நிகழ்ச்சியை எல்.இ.டி. மூலம் ஒளிபரப்பி அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வைணவ செயற்பாட்டாளர் ரங்கராஜ நரசிம்மன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலை சட்ட விரோதமாக கோயிலுக்குள் அரசியல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதைக் கேட்டால் தன்னை பாஜகவினர் மிரட்டுகிறார்கள் என்று புகார் கூறினார். மேலும் அண்ணாமலை மீது ஸ்ரீரங்கம் காவல்நிலையத்திலும் ;புகார் கொடுத்தார் ரங்கராஜ நரசிம்மன். இதற்காக அவருக்கு புகாருக்குரிய ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்கள் வரை பொறுத்துவிட்டு எஃப்.ஐ.ஆர். பதியவில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ரங்கராஜ நரசிம்மன்.
இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இவ்விவகாரம் குறித்து நேற்று (நவம்பர் 14) தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “பிரதமர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் 16 கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. உதாரணத்துக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலும் இந்து சமய அறநிலையத்துறைதான் ஏற்பாடு செய்திருந்தது. நான் அங்கே ஒரு சாதாரண மனிதனாக கலந்துகொண்டேன். இதில் எந்தத் தவறும் கிடையாது. இதில் என் மீது புகார் சொல்லும் தனி நபர்களை மதித்து பதில் சொல்ல வேண்டியது கிடையாது. இதேபோன்ற அரசு நிகழ்ச்சிகளை மேலும் நடத்துவோம். இது தொடர்பாக நான் யாரையும் மிரட்டவில்லை” என்று கூறினார் அண்ணாமலை.
இந்த நிலையில் நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாஜகவினர் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டப் பொதுத்தளங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும், கட்சியின் வேர்பரப்பலுக்கும், தன்னலச்செயல்பாடுகளுக்கும் பாஜகவினர் பயன்படுத்த முனைவது வன்மையானக் கண்டனத்திற்குறியது.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம்சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? அத்துமீறிக் கோயிலுக்குள் உள்நுழைந்து பாஜகவினர் திரையிட்டபோதும் அதனைத் தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை. இத்தகையச்செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது இதுவரை எவ்வித வழக்கும் தொடுக்காது திமுக அரசு அமைதிகாப்பது வெட்கக்கேடானது.
கோயில்களும், வழிபாட்டுத்தலங்களும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதப்பரப்புரைக்கூடங்களாக மாறுமென்றால், அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? எனும் கேள்விக்கு என்னப் பதிலுண்டு! பாஜகவை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி, மக்கள் மன்றத்தில் பரப்புரைசெய்து வாக்குவேட்டையாடிய திமுக, தற்போது அதிகாரமிருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம்செய்வது ஆரிய அடிவருடித்தனமாகும்.
ஆகவே, இனிமேலாவது பாஜகவின் மதவாத செயல்பாடுகளுக்குத் துணைபோகாது, கோயில்களில் மதநிகழ்வுகளை ஒளிபரப்பிய பாஜகவினர் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”என்று தெரிவித்துள்ளார் சீமான்.
இந்த சர்ச்சை தொடர்பாக நாம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை தொடர்புகொள்ள முயன்றோம். அவர் வெள்ள நிவாரணப் பணிகளில் தீவிரமாக இருப்பதால் அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபனிடம் இது தொடர்பாக கேட்பதற்காக அவரை போன்மூலம் தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் பதிலை அறிய தமிழகம் ஆவலாக காத்திருக்கிறது.
**-ராகவேந்திரா ஆரா**
[கோயில்களில் மோடி நிகழ்ச்சி: அறநிலையத்துறையின் ஏற்பாடுதான் -அண்ணாமலை விளக்கம்!](https://minnambalam.com/politics/2021/11/14/34/bjp-annamalai-explain-sritangam-temple-modi-function-tamilnadu-govt-organaise)
[ஸ்ரீரங்கம் கோவிலில் அரசியல் கூட்டம்: அண்ணாமலை மீது வழக்குப் பதிவு?](https://minnambalam.com/politics/2021/11/13/32/bjp-annamalai-srirangam-temple-political-meeting-rangaraja-narasimman-police-complaint-csr-fir)
�,”