100 கோடி தடுப்பூசி: பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி

Published On:

| By Balaji

100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியா உட்பட பல நாடுகளை ஆட்டிபடைத்த கொரோனா தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எந்தளவுக்கு தடுப்பூசி செலுத்துகிறமோ, அந்தளவு கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஜனவரி மாதமே இந்தியாவில் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தாலும், மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி செலுத்திக் கொள்வோர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு ஏற்ற யுக்தியை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றியும் கண்டன. அந்த வகையில், தமிழ்நாட்டில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி மூலம் அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 9 மாதங்களில்(278 நாட்களில்) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.ஏற்கனவே சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், இந்தியா 100 கோடி தடுப்பூசியை செலுத்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,04,80,500ஐ கடந்துள்ளது. இந்த தகவலை கோவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை நாம் கண்கூடாக காண்கிறோம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டரில்,” இந்தியா காலை 10 மணிக்கு 100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டியது. வாழ்த்துக்கள் இந்தியா.! இது நமது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

100 கோடி தடுப்பூசி மைல்கல்லை எட்டியதை சிறப்பிக்கும் வகையில் இன்று பகல் 12.30 மணியளவில் பாடல் ஒன்றையும் ஆடியோ விஷுவல் ஒன்றையும் சுகாதார அமைச்சர் வெளியிடுகிறார்.

நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் அளித்துள்ள பேட்டியில், ” ஒன்பது மாதங்களில் 100 கோடி தடிப்பூசி என்ற சாதனையை அடைய உதவிய மக்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி. இந்தியாவில், இதுவரை, 75 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். அதுபோன்று 30 சதவிகிதத்தினர் இரண்டு தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். 10 கோடி பேர், இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. முதல் மற்றும் இரண்டாவது தவணை செலுத்தாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தடுப்பூசி போடுவதுதான் அடுத்த இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த சாதனைக்கு உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ராபால் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை, 70,83,88,485 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 29,18,32,226 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 18-44 வயதிற்கு உட்பட்டோர் 46,46,62,265 பேர், 45 வயதிற்கு மேற்பட்டோர் 30,36,43,267 பேர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 12,21,60,335 பேரும், தமிழ்நாட்டில் 5,39,60,165 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தற்போது, #VaccineCentury என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share