ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை கேலி செய்து ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உத்தரவின் கீழ் அவரது அமைச்சரவையில் இருந்து ஜீ தொலைக்காட்சிக்கு ஜனவரி 17 ஆம் தேதி, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஜீ நிறுவனத்தின் நொய்டாவில் உள்ள மேனேஜிங் டைரக்டருக்கு தகவல் ஒளிபரப்புத் துறையின் அண்டர் செகரட்டரி சோனிகா கத்தார், ‘ஜீ தமிழ் சேனலில் ஆட்சேபத்துக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியது பற்றி வந்த புகார் தொடர்பாக’ என்ற பொருளின் கீழ் அனுப்பிய அந்த கடிதத்தில்.
“இந்த அமைச்சகத்துக்கு உங்களது ஜீ தமிழ் சேனலில் ஜனவரி 15ஆம் தேதியன்று ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை பற்றிய புகார் வந்துள்ளது. அந்த புகாரின் சாரமும் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஏழு நாட்களுக்குள் நீங்கள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நீதியின் பக்கம் நின்று இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களுக்கு நன்றிகள்.
இந்த செயல்முறை இரு தரப்புக்கும் வெளிப்படையானதாக இருக்கிறது. எந்த ஒரு ப்ராபகண்டாவுக்கும் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதே நம் விருப்பம். ஊடகங்களை நாம் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-வேந்தன்**
[அன்று குணசேகரன்; இன்று பழனியப்பன்](https://www.minnambalam.com/politics/2022/01/17/30/gunasekaran-karupalaniyappan-bjp-zee-tamil-tv-junior-super-star-modi-annamalai-lmurugan)
�,”