நான் மகிழ்ச்சியாக இல்லை: மாசெக்கள் கூட்டத்தில் மனம் திறந்த ஸ்டாலின்

politics

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிப்பதற்காக ஆளுங்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்டு 8) நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் பற்றி விவாதித்து அதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்தார் முதல்வர். இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், மூத்த அமைச்சர்கள், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலை தவிர இன்னொரு டாப்பிக்கையும் இந்த கூட்டத்தில் தானாகவே முன் வந்து பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதைக் கேட்டு பல மாசெக்கள் உருக்கமாகிவிட்டார்கள்.

அப்படி என்ன பேசினார் முதல்வர்? அவரது பேச்சை அறிந்துகொள்ளும் முன் மின்னம்பலத்தில் வெளியான ஒரு செய்தியைப் பற்றிப் பார்த்துவிடுவோம். கடந்த 2021 ஜூலை 6 ஆம் தேதி மின்னம்பலத்தில், [திமுகவினரைத் தவிர்க்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?](https://minnambalam.com/politics/2021/07/06/21/is-mkstalin-avoid-dmk-cadres) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் குமுறலைப் பதிவு செய்திருந்தோம்.

“சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்க இயலாது. அதனால் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாசெக்கள் வருத்தப்படாதீர்கள். உங்கள் மாவட்டங்களில் உங்கள் பொறுப்பில் உள்ள தொகுதியில் நம் கூட்டணி சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெற வையுங்கள். அதை வைத்து உங்களுக்கு நான் மார்க் போடுவேன். தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சியில் உங்களுக்கு உரிய பதவிகளை கொடுப்பேன்’ என்று பேசினார்.

இந்த நிலையில் பத்து வருடங்களுக்குப் பின் அமைந்த திமுக அரசின் வாரியங்கள், அரசுப் பதவிகள் தொடர்பான முக்கிய நியமனங்களில் கட்சிக்காக தொடர்ந்து உழைத்த திமுகவினரே இல்லை.

பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பாக இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இதேபோல லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட தமிழக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திமுகவின் தோழமை அமைப்புத் தலைவரான பொன்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமான தொழிலாளர் வாரியம் சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி புழங்கும் அமைப்பு. இதன் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கலாம். ஆனால் ஏனோ இதையும் தோழமை அமைப்புக்குக் கொடுத்துவிட்டார் தலைவர். இப்படி ஒவ்வொரு பதவியாக கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்தால் திமுகவினருக்கு எப்போது பதவி கொடுப்பார்? ஆட்சிக்கு வந்துவிட்டாலும் திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இல்லை” என்பதே அந்தக் குமுறலாக இருந்தது.

அந்தக் குமுறலுக்கு இன்று (ஆகஸ்டு 8) நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மனம் திறந்து பதில் சொல்லியிருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

இன்றைய கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாவட்டச் செயலாளர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் போன்ற பதவிகளைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அதை செய்ய முடியவில்லை. தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்திருக்கிறேன். கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் சில பதவிகளைக் கொடுத்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள், தோழமை அமைப்புகள் பதவி கேட்டு நிறைய தொந்தரவு கொடுக்கிறார்கள். அதனால்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம்.

கட்சி நிர்வாகிகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம், கவலை எனக்கு நிறைய இருக்கிறது. என்னைப் பார்க்கும் பல பேர், ‘ஆட்சிக்கு வந்தாச்சு, முதல்வர் ஆகியாச்சு ஏன் உங்க முகத்துல மகிழ்ச்சியில்லை?’னு கேட்கிறாங்க. நான் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். தற்காலிகமாகத்தான் வாரிய பதவிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். விரைவில் கொடுப்போம். ஒன்றும் சுணக்கம் அடைந்துவிடாதீர்கள். உள்ளாட்சித் தேர்தலில் நாம் நூறு சதவிகித வெற்றியைப் பெற வேண்டும்” என்று பேசியிருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

**- ராகவேந்திரா ஆரா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.