தமிழகத்தில் பாஜகவை கட்டமைப்பு ரீதியாக வளர்க்க ஒரு பக்கம் தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கருத்தியல் ரீதியாக இளைஞர்களை ஈர்ப்பதற்கும் ஒன்றிய அரசின் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்கும் பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு இருக்கும் பிரத்யேக அதிகாரத்தின் மூலம் நியமன எம்பிக்கள் அமர்த்தப்படுவது வழக்கம்.
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களையும், மக்களிடம் நற்பெயர் பெற்றவர்களையும் மாநிலங்களவை எம்.பி. களாக குடியரசுத்தலைவர் நியமிப்பதற்கு வழிவகை உள்ளது. சச்சின் டெண்டுல்கர், தமிழ்நாட்டில் இருந்து பத்திரிகையாளர் சோ ராமசாமி போன்ற பிரபல நியமன எம்.பிக்களை நாம் அறிவோம்.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் இருந்து 12 நியமன எம்பிகளை குடியரசுத் தலைவர் விரைவில் நியமிக்க இருக்கிறார். தமிழகத்தை தனது ஆடுகளமாக மாற்ற முயற்சிக்கும் பாஜக அதேநேரம் தமிழ்நாட்டு இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய வரவேற்புக்குரிய இருவரை நியமன எம்பி களாக அமர்த்த முடிவு செய்திருக்கிறது.
இந்த எம்பிகளை பிரதமர் அலுவலகம் முடிவு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும்.
தமிழகத்திலிருந்து இரண்டு நியமன எம்பிக்கள் அமர்த்தப்பட திட்டமிட்டுள்ள நிலையில், அந்த இருவரில் ஒருவர் உலகம் அறிந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு என என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீதர் வேம்பு தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். 1989 இல் சென்னை ஐஐடியில் பயின்ற ஸ்ரீதர் வேம்பு அதன்பிறகு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
2009-இல் நுகர்வோர் தொடர்பு மேலாண்மைக்கான சோஹோ மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார். போர்ப்ஸ் இதழின் 2020-ஆம் ஆண்டின் கணக்குப்படி, ஸ்ரீதர் வேம்பு, சோஹோ நிறுவனத்தில் 2.44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 88% பங்குகளை வைத்திருந்தார். 2021-இல் ஸ்ரீதர் வேம்பு இந்திய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டு கல்வியை வழங்குவதற்காக 2004-ஆம் ஆண்டில் ஸ்ரீதர் வேம்பு சோஹோ பள்ளிகளை நிறுவினார். தமிழக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த முயற்சியால் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் ஸ்ரீதர் வேம்புவை தங்கள் ஆதர்ச நாயகனாக கருதுகிறார்கள்.
இப்பேர்பட்ட ஸ்ரீதர் வேம்புவை தமிழகத்திலிருந்து நியமன எம்பியாக அமர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரதமர் மோடி செல்வாக்கு செலுத்த முடியும் என கணக்கிடுகிறது பாஜக.
இன்னொரு நியமன எம்பி யார் என்று ஆலோசனையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
**வேந்தன்**