அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவையும், தினகரனையும் பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது, பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து எங்களை நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் வழக்கின் மதிப்பு அடிப்படையில் இவ்வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே அமமுக என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இவ்வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுபோன்று சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் சென்னை 4ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணன் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள், ‘இந்த வழக்கைத் தொடர்வதற்கு சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. கட்சியை உரிமை கோரிய வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அணிதான் அதிமுக என்று ஏற்கனவே தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தெரிவித்துவிட்டது.
அதுபோன்று அதிமுகவின் பொதுச் செயலாளராக உரிமை கோருவதற்கு சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. கட்சியும் சின்னமும் தங்களிடம் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளது’ என்று தெரிவித்தனர்.
மேலும் சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபராதத்துடன் இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இன்று இந்த வாதம் முடிவடையாத நிலையில் வழக்கின் விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
**-பிரியா**
�,