தமிழ்நாட்டிற்கு ஊரடங்கு தேவையில்லை!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் மூன்றாவது அலையை தடுக்க முழு ஊரடங்கு தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் இன்று(ஜனவரி 8) ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கலந்து கொண்டு பேசியபோது, “சமீபத்தில் நடத்திய ஆய்வுகள் மூலம் நாட்டில் தொற்று நோய் அல்லாத நோய்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இன்னும் வருகிற காலங்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஊட்டசத்து குறைபாடு, இரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான ஊட்டசத்து நிறைந்த உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி,யோகா உள்ளிட்டவைகளை பழகப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்திதான் ஊட்டசத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்து பேசிய அவர், “கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது, அந்த வைரஸ் குறித்தான தகவல்கள் எதுவும் தெரியாததால் பலநாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல், தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கை அமல்படுத்தின. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பற்றி அதிகமாக தெரிந்து கொண்டு வருகிறோம். அது எப்படி பரவுகிறது என்பது நமக்கு தெரியும். மூன்றாவது அலையை கடக்க ‘3 C’யை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று, (close contact) நெருங்கிய தொடர்பு, (close space) (காற்றோட்டம் இல்லாத இடம்), (Crowd) கூட்டம் கூடுவது. இந்த மூன்றையும் நினைவில் வைத்து செயல்பட்டாலே தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். தொற்று பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் நமக்கு தெரியும். அந்த வழிமுறைகளை மக்கள்தவறாமல் பின்பற்ற வேண்டும். மூன்று சி மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றினாலே மூன்றாவது அலையை கடந்துவிடலாம். அதனால் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கிற்கு தேவையில்லை.

ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் அதன் பரவல் வேகம் நான்கு மடங்காக உள்ளது. அதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.கொரோனா தொற்று கடைசி வரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும், அதனால் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை

தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் ஒரு

அருமையான திட்டம் என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share