கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அழைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் நேற்று (ஏப்ரல் 4) நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். சமூக தொலைவு மற்றும் தனித்திருத்தல் காரணமாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரே ஒரு எம்பியை மட்டுமே வைத்திருக்கும் அதிமுக, ராஜ்யசபாவில் ஒன்பது உறுப்பினர்களை வைத்துள்ளது. திமுக மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கலந்துகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம்… தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளோடு ஆலோசிக்க என்ன இருக்கிறது?” என்று கேள்வி கேட்டு அனைத்துக் கட்சிக் கூட்ட அழைப்பை நிராகரித்தார்.
திமுக விவசாய அணிச் செயலாளர் கே.பி. ராமலிங்கம் இந்த விவகாரத்தில் எடப்பாடியை ஆதரிக்க, அவரை முதலில் பொறுப்பில் இருந்து அகற்றி, பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கினார் ஸ்டாலின். இத்தனை அரசியல் விளையாட்டை தமிழகத்தில் நடத்திய இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட விவகாரம் இப்போது இந்திய அளவில் நடக்க இருக்கிறது.
பிரதமர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றி அதிமுக என்ன கருத்து தெரிவிக்கும் என்பது இப்போது எதிர்பார்ப்புக்கு உரியதாகியிருக்கிறது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் மோடியே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், எடப்பாடி தமிழகத்தில் அதேபோல நடத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
**-ஆரா**
�,