நிவர் புயல் தொடர்பான ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள் தண்ணீரில் மூழ்கியதாலும், மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்விதப் பாடத்தையும் அதிமுக அரசு கற்றுக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5,000 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் இதற்குப் பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. “அதிமுக என்ன பாடத்தைக் கற்க வேண்டும்? நிவர் புயலை எப்படி எதிர்கொள்வது, அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டதோடு, பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் என அனைவரும் இரவு பகல் பாராமல் எடுத்த நடவடிக்கை காரணமாக பெரும் பாதிப்பைத் தவிர்த்துள்ளோம்” என்று கூறினார்.
மின்சார விநியோகத்துக்கு இன்னும் எவ்வளவு நேரம் தான் ஆகும் எனச் செய்தியாளர் கேள்வி எழுப்ப, “கொஞ்சம் நேரம் கொடுங்கள். இதென்ன ரிமோட் கன்ட்ரோல்ல பண்ற வேலையா? ஒரு மின்சார கம்ப எடுத்து நட்டு பாருங்க தெரியும். உழைத்தால் தான் உழைப்போட அருமை தெரியும். நிறைய மரம் சாய்ந்திருக்கும் என்பதால் மின் கம்பங்களில் எர்த் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், உயிரையும் பொருட்படுத்தாமல் அரசுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
*எழில்*�,