உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை, சமாதி மனநிலையில் இருக்கிறேன் என்று நித்தியானந்தாவின் கைலாசா முகநூல் பக்கத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூன் 14) என்னால் சரளமாகப் பேச முடிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கிறார். எனினும் சத்சங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி யூடியூப்பில் தவறாமல் பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் பரவியது. ஆனால் இதற்கு கைலாசா தரப்பிலிருந்து மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. என்னால் உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை, 25க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர் என நித்தியானந்தா கூறுவது போல் கைலாசா முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு வந்தது.
குறிப்பாக அதில் விரைவில் எனது உடலில் குடியேறி சத்சங்கம் நடத்துவேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் 10ஆம் தேதி நித்தி வடிவிலான சிலைக்கு அபிஷேகம், ஆராதனை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அவரது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவேளை நித்தி ஜீவ சமாதி அடைந்துவிட்டாரோ என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில் கைலாசா பக்கத்தில் இன்று ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. அதில், “சுஷுப்தி -ஆழ்ந்த உறக்க நிலை, ஸ்வப்னா – கனவு நிலை, ஜாக்ரத் -விழிக்கும் நிலை, துரியா- சுயநினைவு நிலையில் மகா கைலாசத்தை உணருதல், துரியாதிதா- உயிருடன் இருக்கும் நிலை என 5 சமாதி நிலை இருக்கிறது. தற்போது நான் துரியதிதா மனநிலையில் இருக்கிறேன். தினமும் நித்ய சிவ பூஜைக்கு மட்டும் ஜாக்ரத் நிலைக்கு வருகிறேன்.
மேற்கண்ட 5 நிலைகளும் எனக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இதைத்தான் சகஜ சமாதி என்பார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால் தற்போது என்னால் சரளமாக பேச முடிகிறது. என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் என்னைச் சுற்றி இருப்பவர்களால் ஆவணப்படுத்தப்படுகிறது.
சகஜ சமாதி நிலைக்கு வந்துவிட்டால் நான் இனி வழக்கம்போல் சத்சங்கம், வகுப்புகளை நடத்தத் தொடங்குவேன். என்னுடன் பொறுமையாக இருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிடப்பட்டுள்ளது.
**-பிரியா**