கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக அரசியல் பார்வையாளர்கள், எதிர்க்கட்சியினர் சாடி வருகின்றனர். அந்த வகையில், பிரபல பொருளாதார நிபுணரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், மத்திய அரசு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நரேந்திர மோடி 2014-ல் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பிரபாகர் பொருளாதார நிபுணர் என்ற அடிப்படையில் அரசின் செயல்பாட்டை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பிரபாகரின் மனைவி நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு துறை, நிதி அமைச்சர் என முக்கிய பதவி வகித்த போதிலும், பிரபாகர் தனது நிலைப்பாட்டில் உறுதி காட்டி வந்திருக்கிறார். அவ்வப்போது, மத்திய அரசின் செயல்பாடுகளைப் பகுப்பாய்வு செய்து விமர்சனங்களை முன்வைத்து வரும் பிரபாகர், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அந்த வீடியோவில் பிரபாகர், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் பெரும் மருத்துவ நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதனை மறந்து, அரசு தனது பொறுப்புகளைத் துறந்து பொறுப்பற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலத்தில் ஏராளமான உயிரிழப்புகள். நானும் என் நண்பர்கள் பலரை இழந்திருக்கிறேன். தகப்பனாக, தாயாக, மகனாக, மகளாக மருத்துவமனை சென்றவர்கள் ஒருபிடி சாம்பலாக வீடு திரும்பினர். நிறைய குடும்பங்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றன. வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டன.பலர் வாழ்வாதாரத்தை இழந்து வருமானமின்றி இன்றளவும் நிர்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.அரசின் எந்த உதவிகளும் இன்று வரையிலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.
கொரோனா வைரசின் முதலாம் அலை இப்போது தான் ஓய்ந்தது. ஆனால், அதற்குள் இரண்டாம் அலை ஆடத் தொடங்கி விட்டது. அரசுகளின் புள்ளி விவரங்கள் குறித்து நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பாதிப்புகளும், உயிர்ச் சேதங்களும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நோயாளிகளாலும், பரிசோதனைக்கு வந்து குவியும் மாதிரிகளாலும் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் திணறிக் கொண்டிருக்கிறது.
மருத்துவமனையின் வாயில்களில் நீளும் வரிசைகள், மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேதக்குவியல்கள் எனக் காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன. ஆனால், அரசியல் தலைவர்களுக்கும்,மத தலைவர்களுக்கும் இதைப்பற்றி கொஞ்சமும் அக்கறையில்லை. அரசியல் தலைவர்களுக்குத் தேர்தலும், மதத்தலைவர்களுக்கு தங்கள் மத கிரீடமும் இறங்கிவிடக்கூடாதென்ற கவலையைத் தவிர வேறெதிலும் கவனமில்லை. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்,எதிர்க்கட்சி தலைவர்கள் என விழிப்புணர்வூட்ட வேண்டிய அனைவரும், லட்சங்களில் மக்களைக் கூட்டித் தேர்தல் மாநாடு நடத்த, மற்றொருபுறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள்
கூடிக்களித்தனர்.
கொரோனாவின் கோரத்தாண்டவம் தேசம் முழுவதும் பரவியிருக்க, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றையும் பின்பற்றாமல் மேற்கு வங்க தேர்தலுக்கு ஆள் சேர்த்தன பிரதான கட்சிகளான பா.ஜ.க-வும், திரிணமூல் காங்கிரஸும் இந்தியாவில் ஒரு நாளில் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கையானது பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், நேபாள், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளைவிடப் பன்மடங்கு அதிகம். இந்த இமாலய சிக்கலிலிருந்து மீண்டு வருவதற்கு மத்தியஅரசின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். நம்மிடமிருக்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அரசு தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிவுப்பூர்வமான ஆலோசனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பதில்கள், மத்திய அரசின் மெத்தனப்போக்கைக்
காட்டுகிறது.
தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதில் இருக்கும் ஆர்வம், கள நிலவரத்தைச் சமாளிப்பதிலோ, எதிர்கொள்வதிலோ மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. அரசின் கையாலாகாத்தனம் தெளிவாகத் தெரிகிறது. பிரதமரின் பேச்சுத்திறன், புகழ், பிம்பம் அனைத்தும் இந்த மயான சூழலையும் ஈடுகட்டி, நிர்வாகத் திறனற்ற அரசை மீட்டெடுத்துவிடும் என அவர்கள் கனவு காண்கிறார்கள். இந்த பிம்பமும், புகழும் ஒரு நாடகக் கவர்ச்சிபோல வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும். வெளிப்படையான, நிர்வாகத் திறனுள்ள, மனிதாபிமான அடிப்படையிலான அரசும், ஆட்சியாளரும் மட்டுமே வரலாற்றின் ஏடுகளில் நிலைத்திருப்பார்கள். இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம், பொறுப்பற்ற மத்திய அரசின் செயல்பாடே தவிர வேறொன்றும் இல்லை என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் பரகலா பிரபாகர்.
**-ராமானுஜம்**
.�,”