தென்னிந்தியா இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நேற்று (நவம்பர் 14) ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.
“தென்னிந்தியாவின் மாநிலங்களின் பண்டைய கலாச்சாரம், மரபுகள் மற்றும் மொழிகள் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தை வளப்படுத்துகின்றன. தென்னிந்திய மாநிலங்களின் மிக முக்கியமான பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்க முடியாது.
இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளையும் மோடி அரசு மதிக்கிறது. அதனால்தான் இன்று நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், தென்னிந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கு இடையே உள்ள பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை மண்டல கவுன்சில்களில் ஆலோசிக்கவும் வெற்றிகரமாகத் தீர்த்திடவும் முடிகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசாங்கம் 18 மண்டல கவுன்சில் கூட்டங்களை நடத்தியுள்ளது. இப்போது வெவ்வேறு மண்டல கவுன்சில்களின் கூட்டங்கள் தவறாமல் கூட்டப்படுகின்றன, இது அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே நடக்கும்” என்று அமித் ஷா கூறினார்.
மேலும் அமித் ஷா, “கொரோனாவை எதிர்த்து நம்முடைய போராட்டத்தில் இன்றைய நிலவரப்படி 111 கோடி தடுப்பூசி மருந்துகளை நாம் செலுத்தியிருக்கிறோம். இது ஒரு பெரிய சாதனை. கூட்டாட்சியின் ஒரு எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டார். இதற்கிடையே அமித் ஷா தனது ட்விட்டரில், “திருப்பதியில் இன்று நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் நிலுவையில் உள்ள 51 பிரச்சினைகளில் 40க்கு தீர்வு காணப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-வேந்தன்**
�,