{கூடுதலாக 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

Published On:

| By admin

தமிழகத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 26) தொழில் துறை மின்சாரத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, ‘நிர்வாகத்தில் உள்ள தவறுகளால் மின்வெட்டு ஏற்படுவதாகவும், முன்பு அணிலால் மின்வெட்டு ஏற்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் இப்போது நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படுவதாகக் கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகவும், இரண்டு நாட்களில் மின்வெட்டு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

மேலும், முதலமைச்சரின் ஆட்சியில் மின்வெட்டு மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அவர் கடந்த காலங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மின்சாரத் துறை மீதான அறிவிப்பை வெளியிட்ட அவர், தமிழகத்தில் நடப்பாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

தமிழகம் முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நல்ல தீர்வு எட்டப்படும்.
மின்சார வாகனங்களுக்குச் சாலையோரம் உள்ள துணை மின் நிலையங்களில் சார்ஜிங் மையங்கள் நிறுவப்படும்.

தமிழகத்தில் 4,500 இடங்களில் உயர் மின்மாற்றிகள் அமைக்கப்படும். ரூ.1,649 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share