சீனாவில் புதிய கொரோனா அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் தொடங்கியது. பின்பு உலகம் முழுவதும் பரவி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தது. இதுவரை இப்படி ஒரு தொற்றுநோய் உலகம் கண்டதில்லை என்பதால் இதை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் எல்லோரும் தவித்தனர். பின்னர் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் அந்தந்த நாட்டு அரசுகள் இறங்கின.
படிப்படியாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கிய போது சீனாவில் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட உடனேயே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது சீனா அரசு. குறிப்பாக ஷாங்காய், பீஜிங் போன்ற பகுதிகளில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சீனாவில் கொரோனா மீண்டும் கட்டுக்குள் வந்த பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இந்நிலையில் சீனாவில் உள்ள பீஜிங்கில் அடுத்த அலை உருவாகும் அபாயம் உள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட, இரவுநேர கேளிக்கைகளுக்கு பெயர் பெற்ற சாயோயாங் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு பிரபல மதுபான விடுதியிலிருந்து பல பேருக்கு கொரோனா பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.