திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஜூன் 10 ஆம் தேதி கொரோனா தொற்று தாக்குதலையடுத்து ஏற்பட்ட உடல் நலக் குறைவால் காலமானார்.
சென்னையின் முக்கிய மாவட்டத்தின் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த ஜெ. அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், அவர் இடத்தில் அடுத்து யார் என்ற கேள்வி இயல்பாகவே திமுகவினரிடையே எழ ஆரம்பித்துவிட்டது. கட்சி மூன்று நாள் துக்கம் அறிவித்திருக்கும் நிலையிலும், “ஜெ. அன்பழகனின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனாலும் பொதுத் தேர்தலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் அவரது இடத்தில் அடுத்து யார் என்பதை கட்சித் தலைமை விரைவில் முடிவு செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அரசியலில் இது கட்டாயமும் கூட” என்கிறார்கள்.
“திமுகவில் அறுபதுக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் இருந்தாலும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருக்கு ஒரு மகத்துவம் உண்டு. அறிவாலயம் அமைந்திருக்கும் தேனாம்பேட்டை பகுதியை உள்ளடக்கிய திமுகவின் மாவட்ட அமைப்பு என்பது சென்னை மேற்கு மாவட்டம்தான். அதனால் தலைமைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் என்ற பெருமை ஜெ. அன்பழகனுக்கு இருந்தது.
முன்பு இந்த மாவட்டத்துக்கு மாசெவாக தனது ஆதரவாளரான கு.க. செல்வத்தை நியமிக்க ஸ்டாலின் நினைத்தார். அப்போது தலைவர் கலைஞர் மாசெவாக ஜெ. அன்பழகனை நியமிக்க வேண்டும் என்று சொன்னதும் சரி என்று ஏற்றுக் கொண்டார். இந்த பின்னணியில் இப்போது ஜெ. அன்பழகன் இல்லாத ஒரு துன்பமான காலகட்டத்தில் கட்சிக்கு அடுத்த மாசெ யார் என்ற கேள்வி வரும்போது ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வாக இப்போது இருக்கும் கு.க. செல்வத்தின் பெயர் சிலரால் பேசப்படுகிறது. ஜெ. அன்பழகனின் குடும்பத்தில் அவரது தம்பிக்கோ, மகனுக்கோ அரசியல் ஆர்வம் இருந்தாலும் மேற்கு சென்னையின் மாசெ என்ற பதவி அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
தவிர சென்னை மேற்கு மாவட்டத்துக்குள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணாநகர், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, மதுரவாயல், தி.நகர் ஆகிய ஆறு பகுதிகளும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 12 பகுதிகள் தற்போது இருக்கின்றன. 12 பகுதிச் செயலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஜெ. அன்பழகன் பகுதிச் செயலாளராக இருந்தே மாசெவாக வந்தார். அதுபோல இப்போது அன்பழகனுக்குப் பிறகு பகுதிச் செயலாளர்கள் சிலரும் மாசெ ரேஸில் இருக்கின்றனர். அண்ணாநகர் பரமசிவம், மயிலை வேலு உள்ளிட்ட சில பகுதிச் செயலாளர்கள் சீனியர், பணம் செலவு செய்ய வலிமை மிக்கவர்கள் என்ற தகுதிகளின் அடிப்படையில் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள் திமுகவில்.
**-ஆரா**�,