மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி சில தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை மூடாமல், அதற்கு நேர்மாறாக புதிது புதிதாக சுங்கச்சாவடிகளைத் திறப்பதா என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி – சிதம்பரம் இடையிலான 134 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருச்சி – கல்லகம் இடையிலான 38.70 கி.மீ நீள சாலையில் கல்லக்குடியில் ஜூன் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி திறக்கப்படவுள்ளது.
கல்லகம் – மீன்சுருட்டி இடையிலான 59.74 கி.மீ நீள சாலையில் மனகெதி என்ற இடத்தில் கடந்த 27-ஆம் தேதி சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இந்த இரு சுங்கச்சாவடிகளையும் சேர்த்து தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
6 புதிய சுங்கச்சாவடிகள் அடுத்த சில வாரங்களில் திறக்கப் படவுள்ளன. அவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி எண்ணிக்கை 57 ஆக உயரும்.
கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடிதான்; கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் மூடப்படும் என்று கூறியிருந்தார். அந்தக் கெடு முடிய இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்த விவரங்களை எல்லாம் விவரித்துள்ள மருத்துவர் இராமதாசு, சுங்கச்சாவடிகளை மூடுவதற்காக ஆரம்பகட்டப் பணிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று குறைகூறியுள்ளார்.
தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், விதிகளுக்கு முரணாக, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிது புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள் என்றாலே கட்டணச் சாலையாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2000 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கச்சாலைகளாக மாற்றப் பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் 97.67% தேசிய நெடுஞ்சாலைகள் சுங்கச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன என்றும்,
அதேநேரத்தில் தேசிய அளவில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 51,019 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 19.64% சாலைகளுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
“இது பெரும் அநீதி. இந்த அநீதியை களைவதற்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டு தரப்புமே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது மருத்துவர் இராமதாசின் வேண்டுகோள்.