பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தாம்பரம் மாநகரின் புதிய காவல் ஆணையர் ரவி உறுதியளித்துள்ளார்.
மக்கள் தொகை அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையில், சென்னை ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி, தாம்பரம் பகுதிகளை கொண்டு, தனித்தனியாக இரண்டு காவல் ஆணையரகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து ஏடிஜிபி எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாகவும், ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கடந்த நான்கு மாதங்களாக காவல் நிலையங்களை இணைத்தல், காவல் மாவட்டங்களை உருவாக்குவது, புதிய ஆணையரகம் உருவாக்குவது என அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன.
பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புது ஆண்டின் முதல் நாளான இன்று ஜனவரி 1 ஆம் தேதி சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம், ஆவடி சிறப்பு காவல்படை இரண்டாம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம், பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி, செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய ஆணையராக எம்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட ஆணையர் எம்.ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் காவலர்கள் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ரவி,”காவல் பணி மற்றும் சேவைகள் விரைவாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தாம்பரம் காவல் ஆணையரகத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். அதன்படி, நாங்கள் சிறப்பாக பணிபுரிந்து பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்த்து வைப்போம். பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து குற்றங்களையும் இரும்புகரம் கொண்டு அடக்கி, அமைதி பூங்காவாக மாற்றுவோம்” என்று உறுதியளித்தார்.
**-வினிதா**
�,”