புதிய தேசிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களாக நாடே முடங்கி உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, ஒரே நுழைவுத் தேர்வு, 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உள்ளிட்ட பல அம்சங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
**மதிமுக பொதுச் செயலாளர், வைகோ**
பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ் சனாதான சக்திகளின் நீண்டகாலத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறை தொடர்பான எள்ளளவு அதிகாரம்கூட கிடையாது. ஒரே நாடு; ஒரே பாடத்திட்டம் என்று திணிப்பதை எப்படி சகிக்க முடியும்?
மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கி இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பும் வகையில், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்வதை புதிய கல்விக் கொள்கை தடை செய்கிறது. பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
**விசிக தலைவர், திருமாவளவன்**
அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மும்மொழிக் கொள்கையை இந்த தேசிய கல்விக் கொள்கை திணிக்கிறது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருகாலும் ஏற்கமாட்டார்கள். உயர் கல்வியை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதற்கு இந்த கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்.
**பாமக இளைஞரணித் தலைவர், அன்புமணி**
ஒரு சில திட்டங்கள் வரவேற்கக்கூடியவையாக இருந்தாலும் கூட, பெரும்பாலான திட்டங்கள் மொழித்திணிப்பையும், ஏழை அடித்தட்டு மக்களிடமிருந்து பள்ளிக்கல்வியை பறிப்பதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்தக் கொள்கை ஆபத்தானது. 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு கூடாது. கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3&ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல அம்சங்கள் இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களும் ஏராளமாக உள்ளன. எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கி, புதிய கல்வியைக் கொள்கையில் மத்திய அரசு தேவையான திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும்.
**அமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன்**
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்களைச் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கொரோனா பேரிடர் நேரத்தில் அவசரகதியில் மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது ஏற்புடையது அல்ல.
இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அம்சங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு தேவையானதை மட்டும் தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
**மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்**
புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்ப்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.
இதுபோலவே திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தலைமையில், நடந்த மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு, ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், “குலக் கல்வி முறையைக் கொண்டு வந்து, பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து, கல்வி உதவித் தொகை, இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதி வாய்ப்புகளை ஒழித்து கல்வியை முழுக்கவும் வணிகப் பொருளாக மாற்றவும், உயர்கல்விக் கட்டமைப்பை ஒழித்து வணிகக் கொள்ளைக்கு வழிவகுக்கவும், காவி+கார்ப்பரேட் கூட்டணிக்குள் மாணவர்களைச் சிக்க வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும், இந்தக் கொரோனா பெருந் தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி, தேசியக் கல்விக் கொள்கை வரைவை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதை ஒழித்துக் கட்டும் வரை தொடர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஒருபோதும் காவிகளின் கனவு நிறைவேற மாணவர் சமுதாயம் அனுமதிக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எழில்**�,