தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவரும் நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின், தொழிற் கல்வி இணை இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில் நவம்பர் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மொத்தம் பத்து நாட்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் பற்றி ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பயிற்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறப்படும் நிலையில் இணை இயக்குநரின் இந்த அறிக்கை, குறித்து அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை முந்தைய அதிமுக அரசும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசும் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த மாட்டோம் என்று கூறி வருகிறது. இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது. இந்த அறிக்கை என்பது புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டின் கதவுகளைத் திறந்து விடுவதற்கு ஒப்பானது. இதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக நேற்று மதுரையில் விளக்கமளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்றிய அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்குக் கடந்த 18ஆம் தேதி கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக ஒரு இ-மெயில் வந்தது. அதற்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என நினைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அதை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வராமல் பதில் அனுப்பியுள்ளார்.
மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவரே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் அவரை பணி மாறுதல் செய்துள்ளோம்.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வராமல் அந்த இ-மெயிலுக்கு பதில் அளித்து கவனக்குறைவாகச் செயல்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் தற்போதைய ஆட்சியில் அப்படி இருக்க கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளோம். இனிமேல் எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் ஆலோசிக்காமல் பதில் அளிக்கக் கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. தமிழகத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.
**-பிரியா**
�,