வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு மாவட்டங்களுக்கு சென்று திமுகவின் நிலைமை பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.
அந்த வகையில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் கே.என். நேரு நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை பற்றி ஆகஸ்டு 20 ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் வெளியிட்ட [திருப்பூர் வடக்கு திமுக: நேரு நடத்திய ‘தெறி’ விசாரணை!](https://minnambalam.com/politics/2020/08/20/17/thirupur-north-dmk-nehru-enquiry)என்ற தலைப்பிலான செய்தி கொங்கு மண்டலத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திலிருந்து மின்னம்பலத்தைத் தொடர்புகொண்ட பல வாசகர்கள், திமுகவில் நடப்பது பற்றி செய்தி வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
அதேநேரம் கே.என். நேரு நடத்திய ஆய்வை அடுத்து சில நடவடிக்கைகளும் திருப்பூர் வடக்கு திமுகவில் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நேரு, “திருப்பூர் மாநகரத்துல 60 வார்டு இருக்குது, ஒரு வார்டுல கூட திமுக நிலைமை சரியில்லை. 40 வார்டுல வெளியூர்லேந்து வந்தவங்களை எல்லாம் பொறுப்பாளரா போட்டிருக்கீங்க. வெளியூர்க்காரனுக்கு உள்ளூர்ல எப்படி அறிமுகம் இருக்கும்? அவன் எப்படி கட்சி வேலை செய்வான்? 20 வார்டுல உள்ளூர் காரனை போட்டிருக்கீங்க. அவங்களும் சரியா செயல்படலை. இப்படி இருந்தா கட்சி எப்படிய்யா வளரும்?” என்று கோபமாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆய்வு நடந்த அடுத்த சில நாட்களிலேயே இதற்கான எதிரொலிகள் திருப்பூரில் கேட்க ஆரம்பித்துவிட்டன. “ஆய்வுக்குப் பிறகு திருப்பூர் மாநகர திமுக அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஒவ்வொரு வட்டச் செயலாளரையும் தொடர்புகொண்டு சொந்த ஊர் என்ன, என்ன சமுதாயம், அவரவர் வட்டத்தில் கட்சிக்கு என்ன பணி செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி விசாரித்து வருகிறார்.
இதேநேரம் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் வட்டச் செயலாளர்களுக்கு போன் போட்டு, ‘உங்க மேல தலைமையில கடுமையான கோபத்துல இருக்காங்க. உங்களை எல்லாம் நீக்க சொல்லியிருக்காங்க. நான் தான் உங்களுக்காக தலைமைக்கிட்ட போராடிக்கிட்டிருக்கேன்’ என்று சொல்லியிருக்கிறார். நேருவின் விசாரணையை அடுத்து மாநகரப் பொறுப்பாளர் மற்றும் வார்டு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது” என்கிறார்கள் திருப்பூர் மாநகர திமுகவினர்.
**-வேந்தன்**�,