~நீட், உச்ச நீதிமன்ற கிளை: தனிநபர் மசோதா தாக்கல்!

Published On:

| By Balaji

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் இன்று (டிசம்பர் 3) தாக்கல் செய்தார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று கூறியிருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவைத் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு.

இந்த சூழலில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும், நிலையில் எம்.பி.களுக்கு உரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக எம்.பி.வில்சன் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பதே அரிதான விஷயமாக இருக்கிறது. 2017ல் நடைமுறைக்கு வந்த நீட் தேர்வால், 16 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே 2019ல் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தைக் கொண்டு வந்தனர். நீட் சட்டத்தை இதில் புகுத்தித் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனி நபர் மசோதாவைத் தாக்கல் செய்தேன். அதில் எவ்வளவு மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், எவ்வளவு பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தில் சுகாதாரத் துறை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்ற விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு நீட் தேர்வு தேவையற்றது என்று தெரிவித்திருக்கிறேன். இந்த மசோதா இன்று தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டு மாநிலங்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் மசோதா இன்னும் ஆளுநரிடம் தான் உள்ளது. இந்த சூழலில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தேன்” என்றார்.

அதோடு, சென்னை உட்பட இந்தியாவில் 4 நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று மற்றொரு தனி நபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார் எம்.பி.வில்சன். “இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி, அனைத்து தரப்பினரும் அணுகுவதற்கு ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்கிற பாமர மக்களின் 71 ஆண்டு கால கனவினை மெய்ப்பிக்க , இந்திய அரசமைப்புச் சட்டத்தின், பிரிவு 130ல் திருத்தங்கள் மேற்கொண்டு, மண்டல அளவில் டெல்லி, சென்னை , மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தித் தனி நபர் மசோதாவினை நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டு வந்துள்ளேன்” என்று எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2015ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்குச் சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி. திருச்சி சிவா தாக்கல் செய்தார். அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி நபர் மசோதா 2015ல் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு முன்னதாக, 1970ஆம் ஆண்டு ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அது உச்ச நீதிமன்றம் தொடர்பானது. கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share