நீட் – 12 மாநிலங்களின் பதில் வலுசேர்க்கும்: அன்பில் மகேஷ்

Published On:

| By Balaji

நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழகத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த 12 மாநில முதல்வர்களை நேரில் சந்திக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீட் தேர்வுக்கு எதிரான முதல்வர் கடிதத்தையும், முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையையும் கொடுத்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த 12 மாநில முதல்வர்களின் பதிலும் தமிழகத்துக்கு ஆதரவு சேர்க்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி அரியமங்கலம் லட்சுமி நர்சரி பள்ளியில் இன்று கொரோனா விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமே என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் மாணவர்கள் கட்டாயமாகப் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு கூறவில்லை.

ஒரு ஒழுங்குக்கு மாணவர்கள் வர வேண்டும் என்ற நோக்கிலேயே நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. தீபாவளிக்குப் பிறகு தான் பள்ளிக்கு வர முடியும் என்றால் தாராளமாக வரலாம்.

மாநில உரிமைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது முதல் முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுத்து வந்தார். நீட் விவகாரத்தில் 12 மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில் நமது முதல்வரின் குரலுக்குக் கண்டிப்பாக வலு சேர்ப்பதாக இருக்கும்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share