தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று காலை கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.
பாரதிய ஜனதா கட்சி நீட் தேர்வை ஆதரிக்கிற கட்சி என்பதால் அது அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது வியப்பளிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதாவின் வழிவந்த அதிமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என புறக்கணித்தது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியை விட்டு விலகினாலும், பாஜகவின் நிர்ப்பந்தத்தால்தான், அதிமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை தவிர்த்தது என்ற கருத்தும் அரசியல் அரங்கில் உலவுகிறது.
இந்த சூழ்நிலையில்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 5 )மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“நீட் தேர்வை அதிமுக நேற்றும் எதிர்த்தது. இன்றும் எதிர்க்கிறது. நாளையும் எதிர்ப்போம். நீட் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு வரும் வரை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சிதான். திமுகவும் காங்கிரசும் தான் நீட் தேர்வுக்கு முழு முதல் காரணம்” என்ற பன்னீர்செல்வத்திடம்….”தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு, “ஆளுநர் தனது கடமையை ஆற்றி இருக்கிறார்” என்று பதிலளித்தார் பன்னீர்செல்வம்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காத போதும் நீட் எதிர்ப்பு விஷயத்தில் அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**வேந்தன்**