தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் இட ஒதுக்கீட்டு குறித்து தவறாக இடம்பெற்றுள்ளதால் அதனை மாற்றி மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 11 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக இருப்பதாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (அக்டோபர் 13) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு விளம்பரத்தில்,
இதர (OC & FC) முன்னுரிமை பெற்றவர் – 1, முன்னுரிமை அற்றவர் – 2 என்று போடப்பட்டிருக்கிறது. இதர (OC & FC) என்று போடப்பட்டுள்ளது தவறானதாகும். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே எதிரானதாகும்.
OC என்பது Open Competition என்பதன் சுருக்கம். அதனை Other Communities இதர வகுப்புகள் என்று போட்டால், அதன்மூலம் இட ஒதுக்கீட்டையே மாற்றிவிடும் ஆபத்து உள்ளே நுழைந்துள்ளது.
Open Competition – திறந்த போட்டி, பொதுப் போட்டி என்பது, அந்த இடங்களுக்கு அனைவருமே அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டியிடும் இடங்கள் அவை. அதில் முன்னேறிய சாதியினருடன் எஸ்.சி/ எஸ்.டி., ஓ.பி.சி. போன்ற அனைத்துப் பிரிவினருமே போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெறுவர், இடம்பெறுவர்.
ஆனால், ‘இதர’ என்று கூறினால், Other Communities – 31 சதவிகித இடங்கள் அனைத்தும் திறந்த போட்டியினருக்கே என்று பொருள்படும்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் இவ்வாறு O.C.- யை Other Communities என்று சுகாதாரத் துறை அமைச்சராக எச்.வி.ஹண்டே இருந்தபோது வந்த விளம்பரத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.
அப்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். , ‘‘தவறை திருத்த ஆணையிட்டுள்ளேன்; எனவே, தயவு செய்து நீங்கள் வழக்கைத் திரும்பப் பெறுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
எனவே இந்த வழக்கைத் திரும்பப் பெற்றோம். அப்போது அந்த அமைச்சகம் சார்பில், அது – டைப் செய்ததில் (Typographical error) ஏற்பட்ட ஒரு தவறு என்று பொருந்தாத விளக்கம் சொல்லிய நிலையில், பிறகு விளம்பரத்தையே மாற்றினார்கள்.
அதே ஆட்சியில், வி.ஏ.ஓ. (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பிலும் அவ்வாறு விளம்பரம் வந்தது. நமது தலையீட்டால், பிறகு திருத்தப்பட்டது.
மீண்டும் அந்த நிலையில், சில துறைகள் இருக்கின்றன போலும்; உடனே தவறைத் திருத்தி – மீண்டும் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் இந்தத் தவறு இல்லாதபடி தமிழ்நாடு அரசின் பல துறைகளும் கவனமாகச் செயல்படவேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,