கொரோனா மீட்பு விகிதம் 50 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தது முதல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகவேகமாக அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 14) நிலவரப்படி, ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,20, 922 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8,049 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 50.60 சதவிகிதமாக மாறியுள்ளது. இதுவரை 1,62,378 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். குறித்த நேரத்தில் பாதித்தவர்களைக் கண்டறிவதும், தரமான சிகிச்சை அளிப்பதுமே குணமடைவோர் விகிதம் அதிகரிக்க காரணமாக உள்ளது.
தற்போதைய நிலையில் 1,49,348 பேர் வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,195 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,51,432 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 56,58,614 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 893 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டு வருவதால், ஒரு வாரத்தில் 70,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது. 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
**எழில்**�,