கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 11) தமிழக சுகாதாரத் துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
2020 ஜனவரியில் இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை பரவி ஓய்ந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு தற்போது தான் வணிக நடைமுறைகள் பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறது.
இந்நிலையில், அடுத்த அலை பரவக் கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சுமார் 103 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40,370ஆக உள்ளது.
தமிழகத்தில், ஜூன் 1 அன்று 137 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர்கள். ஆனால் 10 தினங்களில் பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில், 129 பேருக்கும், செங்கல்பட்டில் 41 பேருக்கும், திருவள்ளூரில் 11 பேருக்கும், கோவையில் 9 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும், கன்னியாகுமரியில் 9 பேருக்கும், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சிவகங்கையில் தலா ஒருவருக்கும், சேலத்தில் இரண்டு பேருக்கும், திருச்சியில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாலும், பல மாவட்டங்களிலும் பரவியுள்ளதாலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை, சுகாதாரத் துறை, காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். , தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஆரம்பக் கட்டத்திலேயே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பது? கொரோனா அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களைக் கண்காணிப்பது. ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுப்பது? பரிசோதனைகளை அதிகரிப்பது, மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, வெண்டிலேட்டர் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
**பிரியா**