கொரோனா இரண்டாம் அலை பரவல் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வெகுவேகமாக பரவி உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று தலைநகரம் புது டெல்லியில் நடைபெற்ற உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம்” என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் தற்போது 15% அளவுக்கு மேலாக கொரோனா பரவல் இருக்கிறது என்றும், இது போகப் போக மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இந்த மாவட்டங்களில் முழு லாக் டவுன் கொண்டுவருவதன் மூலம் பரவலைக் கட்டுப்படுத்தலாமென்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையில் சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அரசுகள் தத்தமது மாநிலங்களில் முழு ஊரடங்கை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் 26ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் நாடு முழுதும் 150 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதன் மீது மத்திய அரசு மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகே முடிவு செய்யப்படுமென்று தெரிகிறது.
அடுத்த சில வாரங்களில் பரவல் சங்கிலியை உடைக்க மிக அதிக பரவல் சதவிகிதம் இருக்கும் மாவட்டங்களில் கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகள் அவசியம்” என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்த 150 மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருக்கிற தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயமுத்தூர், மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் இருக்கின்றன. எனவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்திய அரசே முழு ஊரடங்கு அறிவிக்கலாம் என்கிறார்கள்.
2021 ஏப்ரல் 28 புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 புதிய நோய்த்தொற்றுகள், 3293 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
**-வேந்தன்**
�,”