தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின், எல்.முருகன் ஆகியோர் மீது தனித் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 74ஆவது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொடியேற்றிவைத்தனர். எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கொடியேற்றினார்.
இந்த நிலையில் தேசிய கொடியை அவமதித்ததாக ஸ்டாலின் மீது சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதில், ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிறகு சல்யூட் அடிக்காமல் அவமதித்துவிட்டார். ஆகவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதுபோலவே எல்.முருகனும் தேசியக் கொடியை அவமதித்துவிட்டதாக சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் முகப்பேரைச் சேர்ந்த குகேஷ் என்பவர் இன்று (ஆகஸ்ட் 17) புகார் அளித்துள்ளார்.
அதில், “ஒவ்வொரு குடிமகனும் உயிராக மதிக்கும் மூவர்ணக் கொடியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கத்துடன் பாஜக கொடி ஏற்றக்கூடிய காவி, பச்சை வண்ணம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் மாண்பையும், தேசியக் கொடியின் மாண்பையும் அவமதித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பாஜகவின் கொடியும், தேசிய கொடியும் ஒருமித்தது என தீய எண்ணத்துடன் மக்கள் மத்தியில் பரப்பி தேசியக் கொடியின் மாண்பை சீர்குலைத்துள்ளனர். ஆகவே, கொடி ஏற்றிய எல்.முருகன் மீதும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்.கணேசன், வானதி சீனிவாசன் ஆகியோர் மீதும் தேசியக் கொடியை அவமதிப்பு செய்த காரணத்திற்காக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
**எழில்**�,