நாங்குநேரி எம்எல்ஏவுக்கு கொரோனா: அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

politics

கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5.5 லட்சத்தை கடந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன், காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகிய இரு மக்கள் பிரதிநிதிகளைத் தமிழகம் இழந்தது.

அதுபோன்று அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நாங்குநேரி அதிமுக எம்எல்ஏ நாராயணனுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தமிழகச் சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற இவர் 17ஆம் தேதி தொகுதிக்குத் திரும்பியுள்ளார். இவருக்குக் கடந்த மூன்று நாட்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கும், மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ தனது குடும்பத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவது தொகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

**-வணங்காமுடி, கவி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *