திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

politics

திருவாரூரில் தியாகராஜர் சுவாமி கோவிலை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் வீதிகளில் ஒன்று தெற்கு வீதி.

இந்த தெற்கு வீதியில் தான் மறைந்த திமுக தலைவரும் தமிழகத்தை ஐந்து முறை ஆண்டவருமான கலைஞர் கருணாநிதி தனது 14வது வயதிலேயே இந்தி எதிர்ப்பு போராட்டக் கொடி பிடித்தார்.

திருவாரூர் அருகிலுள்ள திருக்குவளை தான் கருணாநிதியின் சொந்த ஊர் என்றாலும் திருவாரூர் என்பதே அவரது ஹோம் டவுன் என்ற அடையாளம் ஆகிப்போனது.

குளித்தலையில் தொடங்கி பல்வேறு தொகுதிகளில் தேர்தலில் நின்று வென்ற கலைஞர் தனது விருப்பப்படியே திருவாரூர் தொகுதி பொதுத் தொகுதியாக ஆனதும் தனது கடைசி தேர்தல்களில் திருவாரூரில் தான் போட்டியிட்டு வென்றார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் திருவாரூர் திமுக நகராட்சித் தலைவர் புவன பிரியா தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் மாற்றம் செய்வதாக தீர்மானம் கொண்டு வந்தார். நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாகத்துறைக்கு அனுப்பப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனேயே திருவாரூர் மாவட்ட பாஜக வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜ சுவாமி கோவில் வீதியான தெற்கு வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்று நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்து அமைப்புகளின் கூட்டத்தை பாஜக ஒருங்கிணைத்து நடத்தியது. இதில் தெற்கு வீதி பெயர் மாற்றத்தை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தத் தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தெரியப்படுத்தினார்கள். விளைவாக, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “திருவாரூர் தெற்கு ரதவீதியை கலைஞர் கருணாநிதி சாலை என மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவரது பெயரை சூட்ட விரும்பினால் திருவாரூரில் வேறு தெருக்கள் இல்லையா? தமிழர்களின் கடவுள் பக்தியை இறைநம்பிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள். இறை நம்பிக்கையற்ற மனிதர் பெயரை எதற்காக திருக்கோவிலின் தேர் உலா வரும் தெருக்களில் ஒன்றுக்கு வைக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியிருந்தார் அண்ணாமலை.

இதன்பிறகு இந்தப் பிரச்சினையை திமுக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாஜக இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து திருவாரூரில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தீவிரம் காட்டினர்.

அப்போதே அண்ணாமலையிடம் பேசி திருவாரூரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவுசெய்து ஏப்ரல் 30ஆம் தேதி அண்ணாமலை திருவாரூருக்கு வருவது என முடிவெடுக்கப்பட்டது. தெற்கு வீதியை காப்போம், ஏப்ரல் 30இல் திருவாரூர் நகருக்கு அண்ணாமலை அழைக்கிறார் என்று பாஜகவினர் விளம்பரங்கள் செய்தனர். ஆனால் அதன்பிறகு அவரது இலங்கை பயணம் முடிவு செய்யப்பட்டதால் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு மே 12-ஆம் தேதி என்று நாள் குறித்து தேதி வாங்கிவிட்டனர். திருவாரூர் நகரில் பாஜக நடத்தும் போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்தும் பாஜகவினர் இந்த கூட்டத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து இந்த நான்கு மாவட்டங்களிலும் பாஜகவினர் ஒவ்வொரு கிராமமாக சென்று திருவாரூர் தெற்கு வீதி கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு வரவேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்களும் புதிதாக நியமிக்கப்பட்டதால் அவர்களும் தங்கள் பலத்தை அண்ணாமலைக்கு காட்ட தீவிரமாக வேலை செய்தார்கள்.

பாஜகவினரின் இந்த தொடர் முயற்சியால் திருவாரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சரியாக ஒரு மாதம் கழித்து மே 12ஆம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திமுகவை அதிர வைத்தனர்.

இதற்கிடையே நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு திருவாரூரில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு இரண்டு நாட்கள் கழித்து மே 14 ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ” திருவாரூர் நகராட்சியில் இயற்றப்பட்ட அந்த தீர்மானத்தை தலைவர் நிறுத்தி வைக்க சொல்லி விட்டார். திருவாரூரில் இன்னும் அந்தத் தெரு பழைய பெயரில்தான் இருக்கிறது. வேறு எந்த சமாச்சாரமும் கிடைக்கவில்லை என்று அண்ணாமலை தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று பதிலளித்திருக்கிறார்.

இதை அடிப்படையாக வைத்து பாஜகவிடம் பணிந்து விட்டது திமுக என்று பாஜகவினர் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதாக குதூகளிக்கின்றனர்.

இந்த நிலையில் நாம் திருவாரூர் நகர மன்ற காங்கிரஸ் கவுன்சிலர் சிட்டு பாஸ்கரிடம் இது தொடர்பாகப் பேசினோம்.

“தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரியவில்லை. இந்தப் பிரச்சினையில் அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சொல்லியிருக்கிறார். நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அந்த தீர்மானத்துக்கு மீண்டும் எப்போது வேண்டுமானாலும் உயிர் வரக்கூடும் என்று தான் அர்த்தம்” என்கிறார்.

மின்னம்பலம் சார்பாக நாம் திருவாரூர் நகராட்சி தலைவர் புவன பிரியாவிடம், “தெற்கு ரத வீதி பெயர் மாற்றம் தொடர்பாக திருவாரூர் நகராட்சி இயற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது நகராட்சி நிர்வாகத்துறை எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பி உள்ளதா?” என்று கேட்டோம்.

அதற்கு திருவாரூர் நகராட்சி தலைவர், “இதைப்பற்றி கமிஷனரிடம் தான் கேட்க வேண்டும். நான் கேட்டு உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்.

-**ஆரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *