மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
அதன்படி திருவள்ளூர், சென்னை, கடலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய கிழக்கு கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வரை மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது.
தற்போது விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளதால் இந்த கால கட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
“மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்கத் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதேசமயத்தில் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளைச் சரி செய்வார்கள். இந்நிலையில் படகுகளைச் சரிபார்க்க மானிய கடன் வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
**-பிரியா**