மருத்துவர்களின் எண்ணிக்கையில் சாதனை படைப்போம்: மோடி

Published On:

| By admin

அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் புச் பகுதியில் கட்ச் லேவா பாடல் சமாஜ், என்ற தொண்டு அமைப்பு சார்பில் அதிநவீன வசதிகளுடன் 200 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி நேற்று(ஏப்ரல் 15) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், “புச் பகுதி ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த செலவில் இம்மருத்துவமனை தரமான மருத்துவ வசதிகளை வழங்கும் என்று தெரிவித்தார்.

மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், சிறந்த மருத்துவ வசதி என்பது நோய்க்கான சிகிச்சை மட்டுமல்ல. அது சமூக நீதிக்கான அடையாளமும் ஆகும். தரமான சிறந்த சிகிச்சையால் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்க வேண்டும் மற்றும் மருத்துவக் கல்வி அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வது இந்த அரசின் நோக்கமாகும். எனவே 10 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவர்களின் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனையைப் படைக்கும் என்றார்.

மேலும் அவர் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை என்பதால் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இந்தியாவின் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் தொற்று நோய் பரவலின் போது உலக கவனத்தை ஈர்த்தது என்று தெரிவித்த அவர் தொற்றுநோய் பரவத் தொடங்கிய பிறகு இந்தியாவிலிருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share