முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன் இருவரும் உறவினர்களுடன் வாடஸ் அப் காலில் பேச அனுமதி அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 30 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020 ஏப்ரல் மாதம் இறுதியில் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்தபோது இறுதிச் சடங்கைக் கூட வீடியோ காலில் பார்க்கத் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா, ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் முருகன், நளினி இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மனுவில் முருகனின் தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்க்க அரசு அனுமதிக்காதது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு அரசாணையின்படி சிறைக் கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி இல்லை. இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் பத்து நாளைக்கு ஒரு முறை மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் மூன்று அழைப்புகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை அல்ல என்றும் தமிழக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோகால் மூலம் பேச அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
**-பிரியா**
�,