வெண்ணிலா வீதியில் பேராசான்!

politics

ஸ்ரீராம் சர்மா
நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கப் போன எனக்கு வகுப்பு கசந்தது.
எதிரே இருந்த பெரியார் பில்டிங்கில் ஏறி அமர்ந்தபடி இலக்கியம், கவிதை, அரசியல், நாடகம் நடத்த ஆள் சேர்ப்பது என மனம் போன போக்கில் காலம் கடத்திக் கொண்டிருந்தேன்.
ஒருமுறை பேராசிரியர்கள் கூடும் ஹாலில் என்னைக் கண்ட கமலா மேடம்…
“என்.வி.என் சோமு – ஸ்டாலின் கட்-அவுட் இருக்குற பிரச்சார ஜீப்பில் நீ பேசுறத பார்த்தேனே?” என்றார். “தமிழ் பழகப் போனேன் மேடம்” எனச் சிரிக்காமல் சொன்னேன்.
காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் – கல்லூரிகளுக்கு இடையே அன்று நடந்த நாடகப் போட்டியில், “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்ற எனது துணிச்சலான நாடகம் முதல் பரிசை வென்று விட, இந்தக் கல்லூரியில் இப்படியும் ஒருவன் இருக்கட்டுமென ஆடியபாதம் ஐயாவும், சடகோபன் ஐயாவும் விட்டு வைத்திருந்தார்கள்.
இருவரில் யார் எனது பேராசிரியர், யார் எனது ஹெச்.ஓ.டி என்பதை அதே கல்லூரியில் இன்று துணை முதல்வராக இருக்கும் சேஷாத்திரியிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன் என்றால் எனது கல்லூரி வாழ்க்கையின் லட்சணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
**ஜாம்பஜார் நட்பு! **
திருவல்லிக்கேணியில் கசகசவென்று இருக்கும் ஜாம்பஜார் பக்கம் வகுப்புத் தோழன் பாண்டியன் மூலமாக பாசமான நட்பு வட்டாரம் ஒன்று அமைந்தது. அரட்டை அடிப்பதும் கலைவதுமாக இருந்தோம்.
18 பேர் கொண்ட அந்த ஜாம்பஜார் நட்பு வட்டாரத்துக்கு இலக்கிய உலகம் கொஞ்சமும் பரிச்சயமில்லை என்றாலும் நல்வழிப்படும் நோக்கம் நிறையவே இருந்தது.
அன்றைய ஜாம்பஜார் தானப்ப தெருவில் வாழைத்தார் மொத்தமாக இறங்கும். பகல் முச்சூடும் வியாபாரம் முழு வீச்சில் நடக்கும். எங்கெணும் கூச்சலும், மனித நெரிசலுமாக இருக்கும்.
மாலை நேரம் சந்தடி ஓய்ந்து கிடக்கும் அந்தத் தெருவில் – அடைக்கப்பட்ட வீடொன்றில் பின்புறம் பிதுங்கியிருக்கும் படிகளை பீடமாகக் கொண்டமர்ந்து…
எனக்குத் தெரிந்த கம்பனையும், இளங்கோவையும், பாரதியையும், கவிமணியையும், கண்ணதாசனையும் ஓயாமல் உரக்க பேசிக் கொண்டிருப்பேன். தெருவை அடைத்துக் கொண்டு நண்பர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வழக்கமாக அங்கே கூடி அலப்பறை செய்யும் கூலிக் குடிகாரர்களும் வாழை மிச்சத்துக்காக வந்தாடி நாசமாக்கும் பெருச்சாளிகளும் எங்கள் இலக்கிய விசாரத்தைக் கண்டு “ச்சீச்சீ….” என்று வேறிடம் தேடிக்கொள்ள…
கத்தி கபடாவோடு லோக்கல் ரவுண்டு வந்து காட்டும் அன்றைய ரவுடியான ‘தோட்டம் சேகர்’ தன் அடிப்பொடிகளிடம் “பசங்க, நல்லது பண்ணுதுங்கப்பா… வுடு…” என்றபடி நகர்ந்து போக…
ஒட்டுமொத்த ஏரியாவும் எங்களை அரவணைத்துக் கொண்டது.
**முஷைரா!**
அன்று, தமிழகத்தில் தெரிந்துகொண்டிருந்த ஒரே டி.வி. சேனல் தூர்தர்ஷன்தான். அதில், அவ்வப்போது முஷைரா எனப்படும் உருது கவியரங்கத்தை ஒளிபரப்புவார்கள்.
வெள்ளை வெளேரென மெத்தை – அதன் மேல் வெண் திண்டுகள் – அதில் சாய்ந்தபடியே உருதுக் கவிகள் பாட – கூடியிருக்கும் கூட்டம் “வா…வா….க்யா பாத்ஹே…” என ஆரவாரமாய் அனுபவிக்கும்.
அதைக் காணக் காண, அதுபோல் தமிழ் மேடை ஒன்றை ஆடம்பரமாக நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்னும் ஆயாசப் பேராசை எனக்குள் எழுந்தது.
பாண்டியனிடம்தான் முதலில் சொன்னேன். “அதுக்கென்ன பண்ணிடலாம்டா” என்றான் அனைவரும் கூடிப் பேச, முடிவில் அதற்கு ‘வெண்ணிலா இலக்கிய வீதி’ எனப் பெயர் இட்டேன்.
அடிதடிக்கு பெயர் பெற்ற ஜாம்பஜாரில் இலக்கிய மேடை ஒன்று பிறந்தது.
**ஆரிய சமாஜம்! **
சரி, ஆடம்பரமான வெண்ணிலா கூட்டத்தை எங்கே நிகழ்த்துவது ?
திருவல்லிக்கேணி தீர்த்தாரப்பன் தெருவில் இருந்த அந்த பளபளப்பான ஆரிய சமாஜ கட்டடம் கண்ணில்பட்டது. தயங்கியபடி அணுகிக் கேட்டேன்.
“தம்பி, இது வடவர்களால் கட்டப்பட்ட பகட்டான கட்டடம் என்பதால் சாமானிய மக்கள் இதற்குள் வரத் தயங்குகிறார்கள். உங்கள் இலக்கிய முயற்சியால் எளிய மக்கள் இந்த கட்டடத்துக்குள் வந்துவிட்டால் மகிழ்ச்சிதான். எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாகச் செய்யுங்கள்…” என்றார் அன்றைய செயலர் திருநாவுக்கரசு.
பிறகென்ன? பெயின்ட் டப்பாக்கள், சாக்பீஸ் டப்பாக்களை சுமந்து, டீயும் சிகரெட்டுமாக வெண்ணிலா உறுப்பினர்கள் பீச் ரோடு, மவுன்ட் ரோடு என இரவெல்லாம் அலைந்து திரிந்தோம்.
போக்குவரத்தற்ற நள்ளிரவு தார் ரோட்டின் நட்டநடுவே அமர்ந்து சாக்பீஸில் நான் , “வெண்ணிலா இலக்கிய வீதி” எனப் பெரிதாக எழுதி வைக்க – அதனை வெள்ளைப் பெயின்ட் கொண்டு அடித்து முடிப்பார்கள் வெண்ணிலாவாசிகள்.
சூதுவாது அறியாத வெள்ளந்தியான இளைஞர்களால் இலக்கிய வேட்கை முன்னெடுக்கப்பட்ட அழகான பொற்காலம் அது!
தமிழறிஞர் நாரா நாச்சியப்பனின் புதல்வர் செல்வராஜ் மாதம்தோறும் அழைப்பிதழ் அடித்துக் கொடுக்க சம்மதிக்க…
எனது இலக்கியத் தோழர்களான குணசீலன், பண்டரிநாதன், ஜான்தன்ராஜ், சௌம்ய நாராயணன், திருப்பதிசாமி, சைலேஷ், சந்திரசேகர், பாப்பா ரமேஷ், பர்வீன் சுல்தானா, ரோஸ்மேரி பூங்கோதை, பத்ரி நாராயணன், முத்தழகன், மேகலை, சாய் அமுதா தேவி, அண்ணன் பால சீனிவாசன், சேஷாத்திரி எனப் பலரும் முன்வந்து ஆதரிக்க…
என் கழுத்தில் கிடந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலி ஹிந்தி படிக்கப் போக – வெண்ணிலாவாசிகள் பத்தும் இருபதுமாய் அள்ளிக் கொடுக்க – நிறைந்ததோர் பௌர்ணமி நன்ளாளில்…
புதுக்கவிதையின் பிதாமகர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் தலைமையில் அன்னைத் தமிழுக்கான வெண்பட்டு மெத்தை முஷைராவுக்கு இணையாக பளபளக்க விரிக்கப்பட்டே விட்டது.

**வெண்ணிலா இலக்கிய வீதி!**
வெண்பட்டுத் திண்டுகள் மேல் பன்னிரண்டு இளங்கவிஞர்கள் கவிபாடித் திளைக்க – ஏறத்தாழ 200 தமிழிலக்கிய ஆர்வலர்கள் சூழ அந்த ஆரிய சமாஜக் கட்டடம் களை கட்டி நின்றது.
நிகழ்ச்சியின் எழுச்சியைக் கண்டு மனம் நிறைந்த ஈரோடு தமிழன்பன் ஐயா, “ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சர்மா அவர்களின் திருவள்ளுவர் திருவுருவம் காலம் கடந்தும் நிற்கும் போலவே, அவரது மகனால் தொடங்கப்பட்ட இந்த வெண்ணிலா இலக்கிய வீதியும் இன்னொரு கம்பன் கழகமாக உயர்ந்து நிற்கும்…” என்று வாழ்த்தி விட,
“பௌர்ணமி தோறும் வெண்ணிலா கூட்டம் தொடரும்…” என உணர்ச்சி வசத்தில் அறிவித்து விட்டேன். அடுத்தடுத்த முழு நிலவு நாட்களில்… பெருந்தகைகள் நா.காமராசன், பெரியார்தாசன், திருக்குறள் முனுசாமி, இலக்கிய சுடர் ராமலிங்கம், டாக்டர் காந்தராஜ், நடிகர் கமல்ஹாசன் என பலரும் வந்து வெண்ணிலா இலக்கிய வீதியை அலங்கரித்தார்கள் எனினும், அவர்களை அங்கே வரவழைக்க ஜாம்பஜார் நண்பர்களோடு நான் பட்ட பாடு பெரும்பாடு!
**ஆழ்வார்பேட்டை மடம்! **
“வேலைக்கு போன சித்தாளு” புத்தகத்தை படித்து முடித்ததொரு நாளில் பித்தம் தலைக்கேறிப் போக, அடுத்த வெண்ணிலா இலக்கிய வீதிக்கு ஜெயகாந்தனை அழைக்கப் போகிறேன் என்றேன்.
இலக்கிய உலகின் நண்பர்கள் அதிர்ந்தார்கள்…
“அது பொதுவுடைமை பேசும் சிம்மம். ஆரிய சமாஜத்துக்கு வராது. விளையாடாதே?”
“அழைப்பது ஆரிய சமாஜத்துக்கல்ல. என் வெண்ணிலா இலக்கிய வீதிக்கு.”
“அவரை அணுகுவது கடினம் ”
“தெரியும், மோதித்தான் பார்க்கிறேன்…”
“முடியாது என்றால் என்ன செய்வாய்?”
“மீண்டும் மோதுவேன்.”
“எக்கேடும் கெட்டுப் போ.”
*******
அது ஒரு சனிக்கிழமை மாலை!
இலக்கிய உலகத்தாரால் மடம் எனக் கொண்டாடப்படும் ஜெயகாந்தன் அவர்களின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் நோக்கி வெண்ணிலா நண்பர்கள் சிலரோடு விரைந்தேன்.
அடிவாரத்திலேயே சிலரால் மடக்கி விசாரிக்கப்பட, என்னுடன் வந்த ஜாம்பஜார்வாசிகள் அதை அவமானமாகக் கொண்டு முரண்டு பிடிக்க, ‘ சும்மா இருங்கப்பா’ என அமைதிப்படுத்தியபடியே மெல்ல மேலேறிப் போனேன்.
மேலிடம் மிக அமைதியாக இருந்தது.
வலப்புற ஹாலில் நீண்ட மேஜை போடப்பட்டிருக்க நடுவே இருந்த ஒற்றை நாற்காலியில் சம்மணமிட்டபடி தலைப்பாகைக் கட்டிக் கொண்டு “ஆஹெம்”மென அமர்ந்திருந்தார் ஜெயகாந்தன்!
மேஜையில் அவருக்கெதிரே அடி மேனி கருத்த “ஓல்டு காஸ்க்” ரம் பாட்டில். அதன் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் தட்டு. அதில், பேருக்கு கொஞ்சம் பருப்பு வகைகள்.
இடது கையில் தடிமனாதோர் புஸ்தகத்தைப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தார் ஆசான்.
சரிந்து தொங்கிய முக அட்டையில் தங்க நிறத்தில் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்று காணத் தெரிந்தது.
வாயிலோரம் சிலர் காத்திருப்பதை குறித்துக் கொண்டாலும், எந்த சலனமும் இல்லாமல், தடித்த புத்தகத்தை இடது கைக்கு மாற்றி, சற்றே முன் நகர்ந்து அடுத்த ரவுண்டை முடித்துக் கொண்டவர், மெல்ல பின் சாய்ந்து மேலும் படிப்பில் ஆழ்ந்தார்.
திடீரென கஞ்சா வாடை வீசத் துவங்கியது. அவரது முதுகுப்புறம் இருந்த அறையில் இருந்து ரிக்‌ஷாக்காரர்கள் போலிருந்த சிலர் பைய வெளியேறி வந்தார்கள்.
அவர்களின் கையில் அரை சாண் அளவுக்கு சிமிழ் ஒன்று புகைந்து கொண்டிருந்தது. எட்ட நின்றபடி அந்தச் சிமிழை அவர்கள் நீட்டிக் கொடுக்க…
தடிமனான புத்தகத்தை மேஜை மேல் அலுங்காமல் படிய வைத்த ஜெயகாந்தன் மெல்ல நிமிர்ந்து தன் வலக்கைச் சட்டை மடிப்பை உருட்டி நீக்கினார்.
அங்கிருந்து வெளியெடுத்ததொரு மெல்லிய சல்லாத் துணியை அந்தச் சிமிழ் மீது லாகவமாகப் போர்த்தியபடி வாங்கிக் கொண்டார்.
அதன்பின் இழுத்தார் ஒரு இழுப்பு… அடுத்து ஓர் இழுப்பு… மேலும், ஓர் இழுப்பு… இன்னுமோர் இழுப்பு. ஐயோ, அது யுக இழுப்பு!
திரும்ப ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிமிழை, பணிந்து வாங்கிக் கொண்டு பெருமாளை தரிசித்த பக்தர்கள் போலப் பின் வாங்கி நடந்து உள் அடைந்து கொண்டார்கள் அவர்கள்.
மீண்டும் பாகவதம் ஏந்திப் படிக்கத் தொடங்கி விட்டார் ஜெயகாந்தன்.
அவர் இழுத்த அந்தப் புகையெல்லாம் என்னவானது? எங்கேதான் போனது? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இன்னமும் நாங்கள் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
“இதெல்லாம் ஆவற வேலையாப்பா…” என்றபடி காதோரம் கிசுகிசுத்த வெண்ணிலாக்காரனை “ஐயோ, கொஞ்சம் கம்முன்னு இருப்பா…” என்று அடக்கியபடியே ஆவல் மேலிட அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நேரம் கழிந்தது.
சுரணை திரும்பியவராய் வாயில் பக்கம் திரும்பிய ஜெயகாந்தன் என்னை நோக்கினார்.
“வரலாம்…” என்பது போல் தலையசைக்க எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தோம்.
*******

அவருக்கு எதிரே இருந்ததோர் அறையில் பிளாக் அண்ட் ஒயிட்டில் கம்பீரமாக பைப் பிடிக்கும் ஜெயகாந்தனின் பெரிய சைஸ் புகைப்படம் குண்டு பல்பின் ஒளியில் மங்கலாகத் தெரிந்தது.
அழகான அந்த மீசையைத் தன் இரண்டு உள்ளங்கைகளினாலும் அழுந்த நீவி எடுத்தபடி எதிர்பாராத புன்னகையைப் பரிசளித்தார் ஜெயகாந்தன்.
“ம்ம்ம்…”
“வணக்கம் சார்…”
“சொல்லுங்கள்…”
“நீண்ட நேரம் உங்களுக்காகக் காத்திருந்தோம்…”
“ஏன்…?”
“உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்…”
“மேலே சொல்லலாம்…”
“சார், வெண்ணிலா இலக்கிய வீதி என்னும் எங்கள் அமைப்பில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து நீங்கள் வந்து உரையாற்ற வேண்டும்…”
“இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும்…”
“…………..”
“பொய் வேண்டாம். சொல்லுங்கள், என்ன வேண்டும்…?”
“சார், உங்களிடம் பொய் சொல்லி ஆக வேண்டியது ஏதும் எங்களுக்கு இல்லை. உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது உண்மை. நீங்கள் வந்தால் எங்களுக்குப் பெருமை. அவ்வளவுதான். அப்புறம் உங்கள் இஷ்டம்…”
தலைப்பாகையை மெல்ல கழற்றி முகம் துடைத்துக் கொண்டார்.
அவர் கிளம்பப் போகிறார் என்னும் குறிப்பறிந்து, உள் ரூமில் இருந்தவர்கள் சட்டென வெளிவந்து அவரை சூழ்ந்து கொண்டார்கள்.
மெல்ல படியிறங்கிய அவரை பக்கத்துக்கு ஒருவராக அடைத்துக் கொண்டு கீழிறக்கினார்கள்.
கடைசியாக கீழிறங்க வழி வாய்த்த எனக்காக ரிக்‌ஷாவின் அருகில் புன்சிரிப்போடு காத்திருந்த அந்த பேராசான் மெல்லத் திரும்பிச் சொன்னார்…
“இவ்வளவு நேரம் காத்திருந்தது உங்கள் பிழை. இன்னொருவன் வருகையை உங்களது பெருமையாகக் கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே பெருமையாக்கிக் கொள்ளப் பாருங்கள்…”
“இதை அங்கே வந்து சொல்லுங்கள்…”
“எங்கே..?”
”எங்கள் வெண்ணிலா இலக்கிய வீதியில்…”
“இங்கேயே சொல்லி விட்டேனே, போதாதா ?”
“கண்ணனே ஆனாலும் கீதையை களத்தில் வந்துதான் சொல்லியாக வேண்டும்…“
“அதுசரி, கேட்கும் திராணி உங்களுக்கு உண்டா…?”
“……………”
“உனது இந்த மௌனம் தைரியத்தின் அடையாளம். அது எனக்குப் பிடித்திருக்கிறது. சரி, கூட்டத்துக்கான நாளையும், நேரத்தையும் இவர்களிடம் சொல்லிவிட்டுப் போ. நான் வருவேன்!”
மோட்டார் வைத்த அந்த சைக்கிள் ரிக்‌ஷாவில் ஓர் அரசனைப் போல ஏறி அமர்ந்து கொண்டார் பேராசான்.
அதுவும், ‘ஆம்…ஓம்…ர்ர்ர்ரூம்…’ என்றபடி கிளம்பி மடத்தை விட்டு அகன்று, தூர தூர சென்று மறைந்தது.
பேராசானின் தேதி கிடைத்து விட்ட ஆர்கஸத்தில் ஆழ்வார்பேட்டை நடுச்சாலையில் நின்றபடி இருகரம் கூப்பிக் கொண்டிருந்தேன்.
*******
வெண்ணிலா இலக்கிய வீதிக்கு அந்தப் பேராசான் வந்தவிதம் – தந்தவிதமெல்லாம் தனிக்கதை!

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா **- எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *